ADDED : ஏப் 18, 2026 10:56 PM

புதுடில்லி: ''இந்தியாவில் உள்ள தடகள 'டிராக்குகள்' 90 சதவீதம் தரம் குறைந்ததாக உள்ளன,'' என ஏ.எப்.ஐ., செய்தித் தொடர்பாளர் அடில் சுமரிவாலா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வரும் 2030ல் காமன்வெல்த் (ஆமதாபாத்) விளையாட்டு நடக்க உள்ளது. தவிர, 2036ல் ஒலிம்பிக் நடத்த முயற்சி நடக்கின்றன. இதையடுத்து உலக பாரா தடகளம், உலக உள்ளரங்கு தடகளம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனிடையே, இந்தியாவில் உள்ள தடகள 'டிராக்குகள்' (ஓடு பாதை) குறித்து, இந்திய தடகள கூட்டமைப்பு செய்தித் தொடர்பாளர், 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற முன்னாள் தடகள வீரர், அடில் சுமரிவால்லா 68, கூறியது:
இந்தியாவில் உள்ள தடகள 'டிராக்குகள்' அமைக்கப்பட்டிக்கும் முறை, கடினத் தன்மை, பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் அடிப்படையில் பார்த்தால், 90 சதவீதத்திற்கும் அதிகமானவை தரம் குறைந்ததாக உள்ளன. பல்வேறு இடங்களில் 'பாலியூரித்தீன்' பயன்படுத்துவதற்குப் பதில், டயர்களுக்கு பயன்படுத்தப்படும் ரப்பரை கொண்டு 'டிராக்' அமைத்துள்ளனர்.
பொதுவாக, நீண்ட காலமாக, எந்த ஒரு தடகள டிராக்குகளுக்கும் நாங்கள் சான்றிதழ் வழங்கியது இல்லை. ஆனால், 'தற்போது, 'டிராக்' விஷயத்தில் தலையிட வேண்டும்,' என உலக தடகள கூட்டமைப்பு எங்களை கேட்டுக் கொண்டுள்ளது. இதனால், தடகள டிராக்குகளை தீவிரமாக சோதித்து, அவற்றை முறைப்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
