ADDED : செப் 11, 2026 10:54 PM

பெர்லின்: ஜெர்மனியில், பெண்களுக்கான உலக கோப்பை கூடைப்பந்து 20வது சீசன் நடக்கிறது. இதன் காலிறுதியில் ஜெர்மனி, பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 93-74 (22-19, 20-16, 32-24, 19-15) என வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதியில் பிரான்ஸ் அணி 90-61 (25-20, 23-11, 22-17, 20-13) என, சீனாவை வென்றது. அரையிறுதியில் (செப். 12) பிரான்ஸ்-ஜெர்மனி, ஸ்பெயின்-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி
மான்செஸ்டர்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து 72வது சீசன் நடக்கிறது. மான்செஸ்டரில் நடந்த லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து), சபா (அஜர்பெய்ஜான்) அணிகள் மோதின. இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த போட்டியில், பேயர்ன் முனிக் அணி (ஜெர்மனி) 5-0 என, போடோ கிளிம்ட் அணியை (நார்வே) வென்றது.
ஸ்பெயின் கோல் மழை
சோஸ்னோவியெக்: போலந்தில், பெண்களுக்கான (20 வயது) உலக கோப்பை கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. இதன் 'எப்' பிரிவு லீக் போட்டியில் ஸ்பெயின், நியூ கலிடோனியா அணிகள் மோதின. கோல் மழை பொழிந்த ஸ்பெயின் அணி 11-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே நைஜீரியாவை வீழ்த்திய ஸ்பெயின் அணி, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து 'நாக்-அவுட்' சுற்றுக்குள் நுழைந்தது.
எக்ஸ்டிராஸ்
* ஜப்பானில் நடக்கும் வாலிபால் 'கான்டினென்டல்' சாம்பியன்ஷிப் காலிறுதியில் இந்திய அணி 0-3 (17-25, 15-25, 19-25) என்ற கணக்கில் ஜப்பானிடம் தோல்வியடைந்தது.
* ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடருக்கான ஈஸ்ட் பெங்கால் அணியில் இருந்து விலகிய தமிழகத்தின் நந்தகுமார் சேகர் 30, மீண்டும் ஒடிசா அணியில் இணைந்தார். ஏற்கனவே இவர், 2018-23ல் ஒடிசா அணிக்காக 73 போட்டியில் (9 கோல்) விளையாடி இருந்தார்.
* சியோலில், வரும் செப். 18-19ல் இந்தியா-தென் கொரியா அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் பைனலுக்கான தகுதிச் சுற்றின் 'ரவுண்டு-2' போட்டி நடக்கவுள்ளது. இதில், பயிற்சியின் போது வலது காலில் ஏற்பட்ட காயத்தால் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி பங்கேற்பது சந்தேகம்.
* ஆமதாபாத்தில் நடந்த உலக வில்வித்தை பாரா சீரிஸ் ('ஸ்டேஜ்-3') காம்பவுண்டு பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவியை 19, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பாராட்டினார்.
* பெங்களூருவில், வரும் அக். 20-25ல் பெண்களுக்கான கூடைப்பந்து லீக் ஆசியா 3வது சீசன் நடக்கவுள்ளது. இதில் 'நடப்பு தேசிய சாம்பியன்' இந்திய ரயில்வே அணி அறிமுகமாகிறது. இத்தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய அணியானது ரயில்வே.
* ஆசிய விளையாட்டு (செப். 19 - அக். 4, ஜப்பான்) தடகள போட்டிக்கான இந்திய அணியில் இருந்து, மோசமான செயல்பாடு, மருத்துவ காரணங்களுக்காக அன்னு ராணி (ஈட்டி எறிதல்), நித்யா காந்தே (ஓட்டம்), ஷாநவாஸ் கான் (நீளம் தாண்டுதல்) நீக்கப்பட்டனர்.
