ADDED : செப் 04, 2026 10:56 PM

பெர்லின்: ஜெர்மனியில், பெண்களுக்கான உலக கோப்பை கூடைப்பந்து 20வது சீசன் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ஜப்பான், மாலி அணிகள் மோதின. இதில் ஜப்பான் அணி 102-97 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
தென் கொரியா அசத்தல்
கிடாக்யுஷு: ஜப்பானில், வாலிபால் 'கான்டினென்டல்' சாம்பியன்ஷிப் நடக்கிறது. 'சி' பிரிவு லீக் போட்டியில் தென் கொரியா, சீனதைபே அணிகள் மோதின. இதில் தென் கொரிய அணி 3-1 (29-27, 19-25, 25-15, 25-15) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 'பி' பிரிவு போட்டியில் ஈரான் அணி 3-0 (25-15, 25-12, 25-22) என, நியூசிலாந்தை வென்றது.
ஆஸி., வீரருக்கு தடை
லண்டன்: ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிரியாஸ் 31. கடந்த ஜூன் மாதம் ஸ்பெயினில் நடந்த தொடரின் போது இவருக்கு ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட 'கொகைன்' பயன்படுத்தியது உறுதியானது. இரவில் பொழுதுபோக்கிற்காக இதனை உட்கொண்டதாக கூறிய கிரியாஸ், மறுவாழ்வு சிகிச்சை திட்டத்தில் பங்கேற்றார். இதனையடுத்து உலக ஊக்கமருந்து தடுப்பு மையம் ('வாடா') சார்பில் வழங்கப்பட்ட 3 மாத இடைக்கால தடையை, ஒரு மாதமாக குறைத்து சர்வதேச டென்னிஸ் சங்கம் அறிவித்தது.
எக்ஸ்டிராஸ்
* இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் 'சூப்பர் 100' பாட்மின்டன் காலிறுதியில் இந்தியாவின் அன்மோல் கார்ப் 21-14, 13-21, 21-17 என, சீனதைபேயின் சிங் பிங் ஹுவாங்கை வீழ்த்தினார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் மான்சி சிங் 21-15, 14-21, 21-18 என, ஹாங்காங்கின் சலோனி சமிர்பாயை வென்றார். இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா 10-21, 18-21 என சீனாவின் வென் ஜிங் ஜுவிடம் தோல்வியடைந்தார்.
* பெங்களூருவில், 'குளோபல் செஸ் லீக்' 4வது சீசன் இன்று துவங்குகிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' ஆல்பைன் பைபர்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. பைனல், செப். 13ல் நடக்கவுள்ளது.
* தாய்லாந்தில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் காலிறுதியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் 4-6, 6-4, 6-7 என, தாய்லாந்தின் சுக்சும்ரார்னிடம் தோல்வியடைந்தார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் மணிஷ் 2-6, 4-6 என, பிரான்சின் புளோரன்ட் பாக்சிடம் வீழ்ந்தார்.
* துலீப் டிராபி கிரிக்கெட் பைனலில் (தெற்கு-கிழக்கு மண்டலம், செப். 6-10, சென்னை) இருந்து, திலக் வர்மா, இஷான் கிஷான், வைபவ் சூர்யவன்ஷிக்கு ஓய்வு அளிக்கப்படலாம். இவர்களுக்கு பதிலாக ராகுல், தேவ்தத் படிக்கல், முகமது சிராஜ் விளையாட வேண்டும் என, பி.சி.சி.ஐ., சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
