/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சாதனைகளை தகர்க்க முடியுமா: உசைன் போல்ட் சவால்
/
சாதனைகளை தகர்க்க முடியுமா: உசைன் போல்ட் சவால்
ADDED : மே 17, 2024 10:42 PM

புதுடில்லி: ''ஓட்டத்தில் எனது உலக சாதனைகளை தகர்க்க வாய்ப்பு இல்லை,'' என உசைன் போல்ட் தெரிவித்தார்.
ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட், 37. 'உலகின் மின்னல் வேக மனிதரான' இவர், 2009ல் பெர்லினில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் 100 மீ (9.58 வினாடி), 200 மீ., (19.19) ஓட்டத்தில் சாதனை படைத்தார். இந்த சாதனை இன்றளவும் நீடிக்கிறது.
ஒலிம்பிக் 100 மீ., 200 மீ., ஓட்டத்தில் தொடர்ந்து மூன்று முறை (2008, 2012, 2016) தங்கம் வென்ற ஒரே வீரர் இவர் தான். ஒலிம்பிக் 100 மீ., (9.63, லண்டன், 2012), 200 மீ., பிரிவில் (19.30, பீஜிங், 2008) அதிவேகமாக ஓடி சாதனை படைத்தார். ஒலிம்பிக் 4x100 மீ., ஓட்டத்தில் (36.84, லண்டன், 2012) இவர் இடம் பெற்ற ஜமைக்கா அணி உலக சாதனை படைத்தது. 2017ல் ஓய்வு பெற்றார்.
சமீப காலமாக வீரர்களின் 'வேகம்' அதிகரித்துள்ளது. இந்த சீசனில் 100 மீ., ஓட்டத்தில் அமெரிக்காவின் கிறிஸ்டியன் மில்லர், கெண்டல் வில்லியம்ஸ் (இருவரும் 9.93 வினாடி), 200 மீ., ஓட்டத்தில் கென்னத் பெட்னாரக் (19.67) அசத்தினர். இவர்கள், பாரிஸ் ஒலிம்பிக்கில் (ஜூலை 26-ஆக.11) போல்ட்டின் 'மின்னல் வேக' சாதனையை எட்டிப் பிடிக்க முயற்சிக்கலாம்.
இது குறித்து போல்ட் கூறுகையில்,''சில வீரர்கள் 100 மீ., பிரிவில் 10 வினாடிக்கும் குறைவாக ஓடுகின்றனர். எட்டு ஆண்டுகளுக்குபின் ஒலிம்பிக் செல்கிறேன். பாரிசில் பார்வையாளராக பங்கேற்க உள்ளேன். ஒலிம்பிக் சாம்பியன்களின் ஓட்டத்தை காண ஆர்வமாக உள்ளேன். தற்போதைக்கு எனது உலக சாதனைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. இதற்கு இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படலாம்.
நீரஜ் பெருமை
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, தங்கம் வென்றது பெருமையான தருணம். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டதால் சாதிக்க முடிந்தது,''என்றார்.
இந்தியாவுக்கு 'விசிட்'
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடக்க உள்ள 'டி-20' உலக கோப்பை தொடரின் விளம்பர துாதராக நியமிக்கப்பட்டுள்ளார் போல்ட். இவர் கூறுகையில்,''எனது ரத்தத்தில் கிரிக்கெட் கலந்துள்ளது. 'வேகமான' டி-20 போட்டியே சிறந்தது. சச்சின், லாரா, கோலியின் ஆட்டம் பிடிக்கும். பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்தேன். இங்கு எனக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். மீண்டும் இந்தியா வர ஆவலாக உள்ளது. இம்முறை அதிக நாட்கள் செலவிட விரும்புகிறேன்,'' என்றார்.

