/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'கேண்டிடேட்ஸ் 'செஸ்: குகேஷ் மீண்டும் வெற்றி
/
'கேண்டிடேட்ஸ் 'செஸ்: குகேஷ் மீண்டும் வெற்றி
ADDED : ஏப் 19, 2024 10:08 PM

டொரன்டோ: 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் நிஜாத்தை மீண்டும் வீழ்த்தினார் இந்தியாவின் குகேஷ்.
கனடாவின் டொரன்டோவில் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, குகேஷ், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா உள்ளிட்ட 8 பேர் பங்கேற்கின்றனர். நேற்று 12 வது சுற்று போட்டிகள் நடந்தன. குகேஷ், அஜர்பெய்ஜானின் நிஜாத் அபசோவை சந்தித்தார்.
இருவரும் மோதிய முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த குகேஷ், இம்முறை கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். சிறப்பாக செயல்பட்ட குகேஷ், 57 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சியை எதிர்கொண்டார். இதில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த பிரக்ஞானந்தா, போட்டியின் 54 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். மற்றொரு போட்டியில் விதித் சந்தோஷ், அமெரிக்காவின் பேபியானோ காருணாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தார்.
குகேஷ் 'டாப்'
12 சுற்று முடிவில் குகேஷ் (7.5) மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார். நகமுரா (7.5), நெபோம்னியாட்சி (7.5), காருணா (7.0) அடுத்த மூன்று இடத்தில் உள்ளனர்.
பிரக்ஞானந்தா (6.0), விதித் குஜ்ராத்தி (5.0) 5, 6 வது இடத்தில் உள்ளனர். இன்னும் இரண்டு சுற்று உள்ள நிலையில் குகேஷ் அசத்தினால் சாம்பியன் ஆகலாம். பிரக்ஞானந்தா, விதித்தின் கோப்பை கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.
பெண்களுக்கான 12வது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, உக்ரைனின் அனாவை வீழ்த்தினார். ஹம்பி-அலெக்சாண்ட்ரா (ரஷ்யா) மோதிய போட்டி 'டிரா' ஆனது. இன்னும் இரு சுற்று உள்ள நிலையில், ஹம்பி (6.0, 4வது), வைஷாலி (5.5, 6வது) கோப்பை வெல்லது சிரமம் தான். முதல் இரு இடத்தில் சீனா வீராங்கனைகள் டான் ஜோங்யி (8.0), டிங்ஜி (7.5) உள்ளனர்.

