/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ்: பிரக்ஞானந்தா-விதித் 'டிரா'
/
செஸ்: பிரக்ஞானந்தா-விதித் 'டிரா'
ADDED : ஏப் 16, 2024 10:50 PM

டொரன்டோ: 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, விதித் மோதிய போட்டி 'டிரா' ஆனது.
கனடாவின் டொரன்டோவில் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, குகேஷ், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா உள்ளிட்ட 8 பேர் பங்கேற்கின்றனர்.
இதன் 10வது சுற்றில் இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் சந்தித்தனர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. இப்போட்டி 39 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடத்தில் உள்ள குகேஷ், ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சி மோதினர்.
துவக்கத்தில் இருந்தே இருவரும் 'டிரா' செய்யும் நோக்கத்துடன் விளையாடினர். எதிர்பார்த்தது போல போட்டி 40 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. பத்து சுற்று முடிவில் இந்தியாவின் குகேஷ் (6.0), ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சி (6.0) முதல் இரு இடத்தில் உள்ளனர். 5.5 புள்ளியுடன் பிரக்ஞானந்தா, மூன்றாவது இடத்தில் தொடர்கிறார். நகமுரா (5.5), காருணா (5.5) 4, 5வதாக உள்ளனர். விதித் குஜ்ராத்தி (5.0) 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பெண்களுக்கான 10வது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, பல்கேரியாவின் சலிமோவாவை வென்றார். இந்தியாவின் ஹம்பி, சீனாவின் ஜோங்யி மோதிய போட்டி 'டிரா' ஆனது. ஹம்பி (4.5) 5வது, வைஷாலி (3.5) 8வது இடத்தில் உள்ளனர்.

