ADDED : ஏப் 08, 2024 11:26 PM

மெனோர்கா: மெனோர்கா ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி சாம்பியன் பட்டம் வென்றார்.
ஸ்பெயினில், மெனோர்கா ஓபன் செஸ் 3வது சீசன் நடந்தது. இதன் 9வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, சுலோவேனியாவின் விளாடிமிர் பெடோசீவ் விளையாடினர். இப்போட்டி 'டிரா' ஆனது.
மற்றொரு 9வது சுற்றில் இந்தியாவின் ஆர்யன் சோப்ரா, சகவீரர் பிரணவ் விஜயை வீழ்த்தினார். இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், ஸ்பெயினின் டேனில் யூபா விளையாடிய மற்றொரு 9வது சுற்றுப் போட்டி 'டிரா' ஆனது.
ஒன்பது சுற்றுகளின் முடிவில் அர்ஜுன், ஆஸ்திரியாவின் கிரில் அலெக்சீன்கோ, ஸ்பெயினின் மாக்சிம் சிகேவ் தலா 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர். 'டை பிரேக்கரில்' அசத்திய அர்ஜுன் எரிகைசி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
இத்தொடரின் மூன்று சீசனிலும் இந்திய வீரர்கள் சாம்பியன் பட்டம் கைப்பற்றினர். முதலிரண்டு சீசனில் இந்தியாவின் குகேஷ் (2022, 2023) கோப்பை வென்றிருந்தார்.

