ADDED : செப் 27, 2026 11:13 PM

சமர்கண்ட்: செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, 2 பதக்கம் கிடைத்தது.
உஸ்பெகிஸ்தானில், செஸ் ஒலிம்பியாட் 46வது சீசன் நடந்தது. இதன் ஓபன் பிரிவு 11வது சுற்றில் இந்தியா, ஹங்கேரி அணிகள் மோதின. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (கருப்பு), 64வது நகர்த்தலில் ஹங்கேரியின் பீட்டர் லேகோவை வீழ்த்தினார். 'நடப்பு உலக சாம்பியன்' குகேஷ் தோல்வியை தழுவினார். மற்ற இந்திய வீரர்களான பிரக்ஞானந்தா, நிஹால் சரின், தங்களது போட்டியை 'டிரா' செய்தனர். முடிவில் போட்டி 2.0 - 2.0 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.
11 சுற்றுகளின் முடிவில், இந்தியா, ஜெர்மனி அணிகள் தலா 18 புள்ளிகளுடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டிருந்தன. 'டை பிரேக்கர்' புள்ளி அடிப்படையில் இந்திய அணி (405.5 புள்ளி) 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது. ஜெர்மனிக்கு (386.5) வெண்கலம் கிடைத்தது. உஸ்பெகிஸ்தான் அணி (20 புள்ளி) சாம்பியன் ஆனது.
மூன்றாவது இடம்: பெண்கள் பிரிவு 11வது சுற்றில் இந்தியா, ஜார்ஜியா அணிகள் மோதின. இப்போட்டி 2.0 - 2.0 என 'டிரா' ஆனது. இந்தியாவின் ஹம்பி வெற்றி பெற்றார். வந்திகா அகர்வால், சவிதா ஸ்ரீ, தங்களது போட்டியை 'டிரா' செய்தனர். திவ்யா, தோல்வியை தழுவினார்.
11 சுற்றுகளின் முடிவில், இந்திய பெண்கள் அணி 17 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றது. சீனா (20 புள்ளி), கஜகஸ்தான் (18) அணிகள் முறையே தங்கம், வெள்ளி கைப்பற்றின.
