ADDED : செப் 20, 2026 10:38 PM

சமர்கண்ட்: செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய ஆண்கள் அணி 5வது வெற்றியை பதிவு செய்தது.
உஸ்பெகிஸ்தானில், செஸ் ஒலிம்பியாட் 46வது சீசன் நடக்கிறது. ஓபன் பிரிவு 5வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, நெதர்லாந்தை சந்தித்தது. இதில் இந்தியாவின் பிரக்ஞானந்தா (வெள்ளை), 46வது நகர்த்தலில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியை (கருப்பு) வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் குகேஷ் (கருப்பு), 53வது நகர்த்தலில் நெதர்லாந்தின் எர்வின் ஐ'அமியை (வெள்ளை) வென்றார்.
மற்ற இந்திய வீரர்களான அர்ஜுன் எரிகைசி, நிஹால் சரின், தங்களது போட்டியை 'டிரா' செய்தனர். முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடர்ச்சியாக 5வது வெற்றி பெற்றது.
வைஷாலி ஏமாற்றம்: பெண்கள் பிரிவு 5வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, போலந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியாவின் வைஷாலி (கருப்பு), 57வது நகர்த்தலில் போலந்தின் அலெக்சாண்ட்ரா மால்ட்செவ்ஸ்கயாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
மற்ற இந்திய வீராங்கனைகளான திவ்யா தேஷ்முக், கொனேரு ஹம்பி, வந்திகா அகர்வால், தங்களது போட்டியை 'டிரா' செய்தனர். முடிவில் இந்திய அணி 2.5 - 1.5 என்ற கணக்கில் முதல் தோல்வியை பெற்றது.
