ADDED : செப் 26, 2026 11:04 PM

சமர்கண்ட்: செஸ் ஒலிம்பியாட் 10வது சுற்றில் இந்திய அணி, உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது.
உஸ்பெகிஸ்தானில், செஸ் ஒலிம்பியாட் 46வது சீசன் நடக்கிறது. இதன் ஓபன் பிரிவு 10வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, உஸ்பெகிஸ்தான்-2 அணியை எதிர்கொண்டது. இந்திய அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், நிஹால் சரின், அர்ஜுன் எரிகைசி களமிறங்கினர். 'நடப்பு உலக சாம்பியன்' குகேஷ் (வெள்ளை), 47வது நகர்த்தலில் ஆர்டிக் நிக்படோவை (கருப்பு) வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் நிஹால் சரின் (கருப்பு), 41வது நகர்த்தலில் சுயரோவை தோற்கடித்தார்.
அர்ஜுன் (வெள்ளை), அப்திசலிமோவ் (கருப்பு) மோதிய போட்டி 34வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. பிரக்ஞானந்தா (கருப்பு), 63வது நகர்த்தலில் வாகிதோவை வென்றார். முடிவில் இந்திய அணி 3.5 - 0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பத்து சுற்றுகளின் முடிவில் 8 வெற்றி, ஒரு 'டிரா', ஒரு தோல்வி என, இந்திய அணி 17 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உஸ்பெகிஸ்தான் (18 புள்ளி) நீடிக்கிறது.
பெண்கள் பிரிவு 10வது சுற்றில், 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, சீனாவை சந்தித்தது. இப்போட்டி 2.0 - 2.0 என 'டிரா' ஆனது. இந்தியா சார்பில் சவிதா ஸ்ரீ மட்டும் வெற்றி பெற்றார். ஹம்பி, திவ்யா, தங்களது போட்டியை 'டிரா' செய்தனர். மற்றொரு இந்திய வீராங்கனை வந்திகா அகர்வால் தோல்வியடைந்தார். இந்திய அணி 16 புள்ளிகளுடன் (7 வெற்றி, 2 'டிரா', ஒரு தோல்வி) 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (18 புள்ளி) தொடர்கிறது.
