ADDED : ஏப் 20, 2026 11:08 PM

பாங்காக்: இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ஆனார் ஆரோன்யக் கோஷ்.
தாய்லாந்தில், சர்வதேச 'பாங்காக் செஸ் கிளப் ஓபன்' தொடர் நடந்தது. இந்தியா சார்பில் ஆரோன்யக் கோஷ் உட்பட 241 பேர் இதில் பங்கேற்றனர். 9 சுற்று கொண்ட இப்போட்டியில் ஆரோன்யக் 5 வெற்றி, 4 டிரா செய்து, 7.0 புள்ளி பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.
இதையடுத்து, 'கிராண்ட்மாஸ்டர்' பட்டம் பெறுவதற்கான மூன்றாவது அந்தஸ்தை (2500 'எலோ ரேட்டிங்' புள்ளி) எட்டிய ஆரோன்யக், இந்தியாவின் புதிய 'கிராண்ட்மாஸ்டர்' ஆனார். தற்போது இவர் 2555 புள்ளி பெற்றுள்ளார்.
கடந்த 2003ல் கொல்கட்டாவில் பிறந்தவர் ஆரோன்யக் 23, கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்காக, ஏற்கனவே 2023ல் சான்ட்ஸ் ஓபன், 2024ல் அனெமெசே மாஸ்டர்ஸ் தொடரில், முதல் இரு அந்தஸ்தை எட்டி இருந்தார். இவரது தந்தை மிருனாள் கோஷ், முன்னாள் செஸ் வீரர், தற்போது நடுவராக உள்ளார்.
95வது இந்தியர்
நடப்பு ஆண்டில் (2026) கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற நான்காவது இந்தியர் ஆனார் ஆரோன்யக்.
முன்னதாக மயங்க் சக்ரவர்த்தி, ஆரவ் தெங்லா, ஆர்யன் சாதித்து இருந்தனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவின் 95வது கிராண்ட் மாஸ்டர் ஆனார் ஆரோன்யக்.
