/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சென்னை செஸ்: அர்ஜுன் அபாரம்
/
சென்னை செஸ்: அர்ஜுன் அபாரம்
ADDED : ஆக 07, 2025 11:08 PM

சென்னை: சென்னை 'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றார்.
சென்னையில் 'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர் நடக்கிறது. மாஸ்டர்ஸ் (10), சாலஞ்சர்ஸ் (10) என இரு பிரிவுகளில் மொத்தம் 20 பேர் பங்கேற்கின்றனர்.
மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, நிஹால் சரின், கார்த்திகேயன் முரளி களமிறங்கினர். நேற்று முதல் சுற்று நடந்தன. அர்ஜுன், அமெரிக்காவின் அவாண்டர் லியாங்கை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 29 வது நகர்த்தலில் முன்னிலை பெற்றார். 49 வது நகர்த்தலில் அர்ஜுன் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் விதித் குஜ்ராத்தி, நெதர்லாந்தின் வான் பாரீஸ்ட் மோதினர். 31 நகர்த்தல் வரை முன்னிலையில் இருந்த விதித், அடுத்தடுத்து நகர்த்தலில் தவறுகள் செய்தார். முடிவில், 48 வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.
கார்த்திகேயன்-பிரனவ், ராப்சன் (அமெரிக்கா)-அனிஷ் கிரி (நெதர்லாந்து) மோதிய போட்டிகள் 'டிரா' ஆகின. நிஹால் சரின், ஜெர்மனியின் வின்சென்ட்டிடம் தோல்வியடைந்தார். முதல் சுற்று முடிவில் வின்சென்ட், அர்ஜுன் தலா 1 புள்ளியுடன் முதல் இரு இடத்தில் உள்ளனர்.
ஹரிகா 'ஷாக்'
சாலஞ்சர்ஸ் பிரிவில் வைஷாலி, ஹரிகா என இரு வீராங்கனைகள், 8 வீரர்கள் என 10 இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் அனுபவ ஹரிகா 34, திப்தயன் கோஷை 26, சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா, 44வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். பிரனேஷ், ஆர்யன் சோப்ராவை வென்றார். லியான் மெடோன்கா, ஹர்ஷவர்தனை வீழ்த்தினார். வைஷாலி-இனியன், அபிமன்யு-அதிபன் பாஸ்கரன் மோதிய போட்டி 'டிரா' ஆகின.
திப்தயன், லியான், பிரனேஷ் தலா 1 புள்ளியுடன் 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.