
பாரிஸ்: பிரான்சின் பாரிசில் 'பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ் தொடர் 2 வது சீசன் நடக்கிறது. இதன் தகுதிச்சுற்றில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சன் உள்பட 12 பேர் பங்கேற்றனர்.
'ரவுண்டு ராபின்' முறையில் போட்டி நடந்தன. 11 சுற்று முடிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட 'டாப்-8' வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறினர். மற்ற இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா (9 வது), குகேஷ் (11), விதித் குஜ்ராத்தி (12) வெளியேறினர். நேற்று காலிறுதி போட்டி துவங்கின. இதில் அர்ஜுன், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா மோதுகின்றனர்.
அர்ஜுன் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட அர்ஜுன், முன்னிலை வகித்தார். பின் அர்ஜுன் செய்த தவறுகள் காரணமாக நகமுரா முந்தினார். 77 நகர்த்தலுக்குப் பின் போட்டி 'டிரா' ஆனது. இருவரும் 0.5-0.5 என சமநிலையில் உள்ளனர்.

