ADDED : மே 06, 2026 10:48 PM

வார்ஷா: கிராண்ட் செஸ் தொடரின் 11வது சீசன் துவங்கியது. போலந்து, ருமேனியா, குரோஷியா, அமெரிக்கா உட்பட இந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 6 தொடர் நடக்கும். உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் இதன் முடிவில் ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பை கொண்டு செல்வார்.
இதன் முதல் தொடர் போலந்தின் வார்ஷாவில் நடக்கிறது. ரேபிட், பிளிட்ஸ் என இரு முறையில் போட்டிகள் நடக்கும். முதலில் 'ரேபிட்' செஸ் நடக்கிறது.
முதல் சுற்றில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், பிரான்சின் அலிரேசா மோதினர். இப்போட்டி 88 நகர்த்தலில் 'டிரா' ஆனது. அடுத்து அமெரிக்காவின் ஹான்சிடம் தோல்வியடைந்தார்.
மூன்றாவது சுற்றில் போலந்தின் ஜான் டுடாவை சந்தித்தார். சிறப்பாக செயல்பட்ட குகேஷ், 45 நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
ஐந்தாவது சுற்றில், உலக சாம்பியன்ஷிப்பில் தன்னுடன் மோத உள்ள, கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் ஆன, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவை சந்தித்தார். இதில் கருப்பு நிற காய்களுடன் சிறப்பாக செயல்பட்ட குகேஷ், 52 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். ஐந்து சுற்று முடிவில் குகேஷ், 5 புள்ளியுடன் 5வது இடத்தில் உள்ளார்.
