/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'விசா' தாமதம்: தவிக்கும் அர்ஜுன்
/
'விசா' தாமதம்: தவிக்கும் அர்ஜுன்
ADDED : டிச 21, 2024 10:19 PM

புதுடில்லி: அமெரிக்காவில் நடக்கவுள்ள சர்வதேச செஸ் தொடரில் பங்கேற்க, விசா கிடைக்காமல் தவிக்கிறார் அர்ஜுன்.
அமெரிக்காவில் உலக 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் தொடர் வரும் டிச. 26-31ல் நடக்கவுள்ளது. இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு 2024ம் ஆண்டு இறுதியில் அதிக புள்ளியுடன் முதலிடம் பெறும் வீரருக்கு 'ஜாக்பாட்' காத்திருக்கிறது.
இவர், 2026, உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் குகேஷிற்கு எதிராக களமிறங்கும் வீரரை தேர்வு செய்யும் 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம்.
இப்போதைய நிலையில் அமெரிக்காவின் பேபியானோ காருணா (130.42 புள்ளி), இந்தியாவின் அர்ஜுன் (124.40), உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (108.49) உள்ளனர். ஆனால் இத்தொடரில் பங்கேற்கச் செல்ல அர்ஜுனுக்கு, அமெரிக்க விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில்,' விசா பெறுவதற்காக கடந்த வாரம் என பாஸ்போர்ட்டை அமெரிக்க துாதரகத்திடம் சமர்ப்பித்து இருந்தேன். இன்னும் எனக்கு திரும்ப கிடைக்கவில்லை. உலக 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்காக அமெரிக்கா செல்ல வேண்டும். விரைவில் பாஸ்போர்ட்டை திரும்ப வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்., மத்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய செஸ் கூட்டமைப்பு உதவ வேண்டும்,' என தெரிவித்துள்ளார்.

