கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா * நார்வே செஸ் தொடரில்
கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா * நார்வே செஸ் தொடரில்
ADDED : மே 28, 2026 11:04 PM

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரில் உலகின் 'நம்பர்-1' வீரர் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானாந்தா.
நார்வேயில், சர்வதேச செஸ் ('கிளாசிக்கல்') தொடர் நடக்கிறது. ஆண்கள் பிரிவில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, 5 முறை உலக சாம்பியன், நார்வேயின் கார்ல்சன் உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர்.
இதன் மூன்றாவது சுற்றில் பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் 'நம்பர்-1' ஆக உள்ள கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 17, 18வது நகர்த்தலில் முன்னேறினார். சுதாரித்துக் கொண்ட கார்ல்சன், 35 வது நகர்த்தலில் மீண்டார்.
44வது நகர்த்தலில் கார்ல்சன் செய்த தவறு காரணமாக, பிரக்ஞானந்தா முந்தினார். வேறு வழியில்லாத நிலையில் கார்ல்சன் தோல்வியை ஏற்றுக் கொண்டார். கடந்த 2024ல் நார்வே தொடர், 3வது சுற்றில் சாதித்தது போல, மீண்டும் கார்ல்சனை அவரது சொந்தமண்ணில் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.
குகேஷ் தோல்வி
குகேஷ்-பிரான்சின் அலிரேசா மோதிய போட்டி 'டிரா' ஆனது. அடுத்து நடந்த 'டை பிரேக்கர்' போட்டியில் குகேஷ் தோல்வியடைந்தார். மூன்று சுற்று முடிவில் அலிரேசா (7.5), பிரக்ஞானந்தா (4.5), சோ வெஸ்லே (4.0) 'டாப்-3' இடங்களில் உள்ளனர். குகேஷ் 4 (3.5), கார்ல்சன் (1.5) கடைசி (6வது) இடத்தில் உள்ளனர்.
திவ்யா 'ஹாட்ரிக்'
பெண்கள் பிரிவில் உலக கோப்பை வென்ற இந்தியாவின் திவ்யா, ஹம்பி, உலக சாம்பியன், சீனாவின் ஜு வென்ஜுன், உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர். மூன்றாவது சுற்றில் திவ்யா, கஜகஸ்தானின் பிபிசாரா மோதிய போட்டி 'டிரா' ஆனது. அடுத்து நடந்த 'டை பிரேக்கர்' போட்டியும் 'டிரா' ஆனது. எனினும் போட்டி விதிப்படி, கருப்பு நிற காய்களுடன் விளையாடிய திவ்யா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இது, இத்தொடரில் பெற்ற 'ஹாட்ரிக்' வெற்றி ஆனது.
மூன்று சுற்று முடிவில் கஜகஸ்தானின் பிபிசாரா (5.5), திவ்யா (4.5), உக்ரைனின் அனா முஜிசக் (4.0) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். ஹம்பி (2.0) கடைசி (6வது) இடத்தில் உள்ளார்.
