/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ் ஒலிம்பியாட்... நனவான கனவு * இந்திய வீரர்கள் உற்சாகம்
/
செஸ் ஒலிம்பியாட்... நனவான கனவு * இந்திய வீரர்கள் உற்சாகம்
செஸ் ஒலிம்பியாட்... நனவான கனவு * இந்திய வீரர்கள் உற்சாகம்
செஸ் ஒலிம்பியாட்... நனவான கனவு * இந்திய வீரர்கள் உற்சாகம்
ADDED : செப் 23, 2024 11:10 PM

புதுடில்லி: ''செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களது கனவு நனவானது,'' என குகேஷ் தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 45வது சீசன் ஹங்கேரியில் நடந்தது. மொத்தம் 197 அணிகள் களமிறங்கின. ஓபன் பிரிவில் இந்தியா சார்பில் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, ஹரிகிருஷ்ணா பங்கேற்றனர்.
11 சுற்றில் 10 வெற்றி, 1 'டிரா' என 21 புள்ளி எடுத்த இந்தியா, முதலிடம் பிடித்தது. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதன் முறையாக இந்தியா சாம்பியன் ஆனது. முன்னதாக 2014, 2022ல் வெண்கலம் வென்றது. 10 போட்டியில் 9 புள்ளி எடுத்த குகேஷ் (8 வெற்றி, 2 'டிரா'), 11 ல் 10 புள்ளி எடுத்த அர்ஜுன் (9 வெற்றி, 2 'டிரா) என இருவரும் தனிநபர் பிரிவுகளில் தங்கம் வென்றனர்.
பெண்கள் அபாரம்
பெண்கள் பிரிவில் இந்தியா சார்பில் ஹரிகா, திவ்யா, வைஷாலி, வந்திகா, தானியா பங்கேற்றனர். 11 சுற்றில் 19 புள்ளி (9 வெள்ளி, 1 'டிரா', 1 தோல்வி) எடுத்து முதன்முறையாக தங்கம் வென்று சாதித்தது. தனிநபர் பிரிவில் திவ்யா (11ல் 8 வெற்றி, 3 'டிரா'), வந்திகா (9ல் 6 வெற்றி, 3 'டிரா') தங்கம் கைப்பற்றினார்.
இதுகுறித்து இந்திய வீரர் குகேஷ் 18, கூறுகையில்,'' செஸ் ஒலிம்பியாட் தனிநபர் பிரிவில் நான் தங்கம் வென்றது மகிழ்ச்சி. இந்திய அணியும் தங்கம் வெல்ல வேண்டும் என நினைத்தேன். இது, கடந்த முறை நழுவியது. தற்போது இந்திய அணி தங்கம் வென்றுள்ளதால், எனது கனவு நனவானது,'' என்றார்.
செஸ் வளர்ச்சியின் 'தந்தை' ஆனந்த்
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் ஐந்து முறை கோப்பை வென்றவர் இந்திய ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் 54. இளம் இந்திய செஸ் நட்சத்திரங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். பிரக்ஞானந்தா, குகேஷ், அர்ஜுன், வைஷாலி உட்பட பலர், உலக அரங்கில் சாதிக்க, ஆனந்த் 'அட்வைசும்' காரணம். இவர் குறித்து சர்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிட்ட செய்தியில்,' இந்திய செஸ் வளர்ச்சியின் தந்தை,' என பாராட்டு தெரிவித்துள்ளது.
அடுத்து உலக சாம்பியன்
இந்தியாவின் ஆனந்த் கூறுகையில், ''செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணிகள் சிறப்பாக செயல்பட்டன. இரண்டு ஆண்டுக்கு முன் நழுவவிட்ட தங்கத்தை இப்போது வென்றுள்ளனர். ஓபன் பிரிவில் அசத்திய இந்திய வீரர்கள் 14 வயதுக்கு முன் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் வென்றவர்கள். இவர்கள் அப்படியே சீனியர் அரங்கில் ஜொலிக்க அட்வைஸ் கொடுத்தேன். இவ்வளவு விரைவில் சாதிப்பர் என நம்ப முடியவில்லை. இந்த வெற்றி தற்செயலாக கிடைக்கவில்லை.
அதேநேரம் எனது எதிர்பார்ப்புக்கு மாறாக விரைவில் நடந்துள்ளது மகிழ்ச்சி. அடுத்து உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் குகேஷ் பங்கேற்க உள்ளார். தற்போது கிடைத்த வெற்றி, குகேஷ் தன்னம்பிக்கையுடன் செயல்பட உதவும். மீண்டும் சிறப்பாக செயல்பட்டு அசத்துவார் என நம்புகிறேன்,'' என்றார்.
இரட்டை மகிழ்ச்சி
வைஷாலி, பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு கூறியது:
கிரிக்கெட்டுக்கு அடுத்து செஸ் பிரபலம் அடைந்துள்ளது. அதிக நபர்கள் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர். அகாடமி தவிர மற்ற இடங்களிலும் செஸ் விளையாடுவது, அவர்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறி விட்டது. இளம் நட்சத்திரங்கள் இதை ஒரு தொழிலாகவே எடுத்துக் கொள்கின்றனர்.
பிரக்ஞானந்தா செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்றதால் நாங்கள் பெருமைப்படுகிறோம். எனது மகள் வைஷாலி இடம் பெற்ற அணியும் தங்கம் வென்றதால் இரட்டை மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வீரர், வீராங்கனையும், உலக சாம்பியன் ஆக வேண்டும் என்று தான் விரும்புவர். வைஷாலி, பிரக்ஞானந்தா தங்களது தரவரிசையை உயர்த்திக் கொண்டுள்ளனர். அடுத்து உலக சாம்பியன் ஆக வேண்டும் என்பது தான் இலக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.