செஸ்: ஷர்வானிகா 'சாம்பியன்' * உலக ஜூனியர் தொடரில் அபாரம்
செஸ்: ஷர்வானிகா 'சாம்பியன்' * உலக ஜூனியர் தொடரில் அபாரம்
ADDED : ஏப் 19, 2026 12:01 AM

புதுடில்லி: உலக ஜூனியர் தொடரில் தமிழகத்தின் ஷர்வானிகா சாம்பியன் ஆனார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் செர்பியாவில் வர்ன்யாக்கா பன்ஜா நகரில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான, உலக 'கேடட் அண்டு யூத் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. 40 நாடுகளில் இருந்து 432 பேர் பங்கேற்றனர். ஆண்கள் (4), பெண்கள் (4) என 8 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. பெண்கள் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இந்தியா சார்பில் தமிழகத்தின் அரியலுாரை சேர்ந்த ஷர்வானிகா பங்கேற்றார்.
கடந்த 2024, 2025 தொடரில் 10 வயது பிரிவில் சாம்பியன் ஆன, ஷர்வானிகா, இம்முறையும் துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டார். முதல் 6 சுற்றில் தொடர்ந்து வெற்றி பெற்றார். 7வது சுற்றில் 'டிரா' செய்தார். அடுத்த 3 சுற்றிலும் அசத்திய இவர், கடைசி, 11 வது சுற்றில் செர்பியாவின் நடாலிஜாவை சந்தித்தார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஷர்வானிகா, 35வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மொத்தம் 11 சுற்றில் ஒன்றில் கூட தோற்காத ஷர்வானிகா, 10.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, தங்கம் வென்று, சாம்பியன் ஆனார். ரஷ்யாவின் அலிசா (6.0), உக்ரைனின் டேரியா (5.5) அடுத்த இரு இடம் பெற்றனர்.
