ADDED : நவ 26, 2024 11:16 PM

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ் 'டிரா' செய்தார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடக்கிறது. கேண்டிடேட்ஸ் தொடரில் சாதித்த, 'நம்பர்-5' ஆக உள்ள இந்தியாவின் குகேஷ் 18, நடப்பு உலக சாம்பியன், 'நம்பர்-15' ஆக உள்ள டிங் லிரென் 31, (சீனா), பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
மொத்தம் 14 சுற்று நடக்கும். முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். மொத்த பரிசுத் தொகை ரூ. 21 கோடி. முதல் சுற்றில் டிங் லிரென் வென்றார். நேற்று இரண்டாவது சுற்று நடந்தது.
குகேஷ் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். துவக்கத்தில் இருந்தே இருவரும் சமநிலையில் நீடித்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் மாறி மாறி, தங்களது குதிரையை நகர்த்த, 23வது நகர்த்தலில் போட்டியை 'டிரா' செய்தனர். இரண்டு சுற்று முடிவில் டிங் லிரென் 1.5-0.5 என முன்னிலையில் உள்ளார். இன்று நடக்கும் மூன்றாவது சுற்றில் குகேஷ், வெள்ளை நிற காய்களுடன் விளையாடுகிறார்.