/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உலக செஸ் 'கிங்' குகேஷ் * இளம் வயதில் சாம்பியன் * கடைசி சுற்றில் சீன வீரரை வீழ்த்தினார்.
/
உலக செஸ் 'கிங்' குகேஷ் * இளம் வயதில் சாம்பியன் * கடைசி சுற்றில் சீன வீரரை வீழ்த்தினார்.
உலக செஸ் 'கிங்' குகேஷ் * இளம் வயதில் சாம்பியன் * கடைசி சுற்றில் சீன வீரரை வீழ்த்தினார்.
உலக செஸ் 'கிங்' குகேஷ் * இளம் வயதில் சாம்பியன் * கடைசி சுற்றில் சீன வீரரை வீழ்த்தினார்.
ADDED : டிச 12, 2024 11:09 PM

சிங்கப்பூர்: செஸ் உலகின் இளம் சாம்பியன் ஆகி சாதனை படைத்தார் இந்தியாவின் குகேஷ். உலக சாம்பியன்ஷிப் தொடர் கடைசி சுற்றில் டிங் லிரெனை வீழ்த்தினார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு (பிடே) சார்பில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடந்தது. 'கேண்டிடேட்ஸ்' தொடரில் கோப்பை வென்ற உலகின் 'நம்பர்--5' இந்தியாவின் குகேஷ் 18, 'நடப்பு உலக சாம்பியன்', உலகின் 'நம்பர்--15' வீரர், சீனாவின் டிங் லிரென் 32, விளையாடினர். மொத்தம் 14 சுற்று கொண்ட இதன், 13 சுற்று முடிவில் இருவரும் தலா 6.5 புள்ளி பெற்று, சம நிலையில் இருந்தனர்.
கடைசி சுற்று
நேற்று கடைசி, 14வது சுற்று நடந்தது. இதில் வெல்லும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம் என்ற நிலை இருந்தது. குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். வழக்கம் போல குகேஷ் வேகமாக செயல்பட, லிரென் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் அதிக நேரம் எடுத்துக் கொண்டார்.
போட்டியின் 50 வது நகர்த்தலின் போது, லிரெனை விட குகேஷிற்கு 52 நிமிடம் அதிகமாக இருந்தது. மறுபக்கம் போட்டி 'டிரா' நோக்கிச் சென்றது போல இருந்தது. இதனால் வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி, 'டை பிரேக்கருக்கு' செல்லும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
போராடிய குகேஷ்
ஆனால் குகேஷ் வெற்றிக்காக போராடினார். கூடுதலாக ஒரு சிப்பாய் இருந்தது இவருக்கு சற்று சாதகமாக இருந்தது. தவிர, நேரமும் குறைவாக இருந்ததால், லிரெனுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
போட்டியின் 55வது நகர்த்தலில் லிரென், தனது யானையை தவறான இடத்தில் நகர்த்தி பெரிய தவறு செய்தார். வாய்ப்பை துல்லியமாக பயன்படுத்திக் கொண்ட குகேஷ், அடுத்தடுத்து அசத்தினார்.
வேறு வழியில்லாத நிலையில் 58 வது நகர்த்தலில் லிரென், தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்குப் பின், கடைசி, 14வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்று அசத்தினார். இதையடுத்து 7.5- புள்ளியுடன் புதிய உலக சாம்பியன் ஆனார். 18 வயதான தமிழகத்தின் குகேஷ், உலக செஸ் சாம்பியன் ஆன, இளம் வீரர் என சாதனை படைத்தார்.
பிரதமர் மோடி பாராட்டு
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,' வாழ்த்துகள் குகேஷ். வியக்கத்தக்க திறமை, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, மனம் தளராமல் போராடியதற்கு கிடைத்த பரிசு இது. செஸ் வரலாற்றில் தனது பெயரை பொறித்தது மட்டுமன்றி, கோடிக்கணக்கான இளம் இந்திய மனங்களை பெரிய அளவில் கனவு காணவும், சிறந்து விளங்கவும் துாண்டுகோலாக அமைந்துள்ளார். எதிர்காலத்திலும் சாதனை வீரராக திகழ வாழ்த்துகிறேன்,'' என தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி:
குகேஷ் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் ஆனதற்கு பாராட்டுகள். உங்களது குறிப்பிடத்தக்க சாதனை, நாட்டின் செஸ் பாரம்பரியத்தை தொடர்கிறது. மற்றொரு உலகத்தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்குவதன் வாயிலாக, உலக செஸ் தலைநகரம் என்ற இடத்தை, சென்னை மீண்டும் உறுதிப்படுத்த உதவுகிறது. உங்களை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனந்திற்கு அடுத்து
இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் 55. ஐந்து முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் (2000, 2007, 2008, 2010, 2013) பட்டம் வென்றார். தற்போது ஆனந்துக்குப் பின் உலக சாம்பியன் ஆன இரண்டாவது இந்தியர் ஆனார் குகேஷ்.
கண்ணீருடன்...
கடைசி சுற்றில் வெற்றி பெற்றதும், சிறிது நேரம் அமைதியாக இருந்தார் குகேஷ். பின் உலக சாம்பியன் ஆன உற்சாகத்தில் கண்ணீர் விட்டு அழுதார் குகேஷ். செஸ் போர்டை தொட்டு வணங்கினார். பின் அங்கிருந்த தனது தந்தையை கட்டி அணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
18 வது வீரர்
'கிளாசிக்கல்' முறையில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் கோப்பை வென்ற 18 வது வீரர் ஆனார் குகேஷ். இமானுவேல் லஸ்கெர் (போலந்து), கேரி காஸ்பரோவ் (ரஷ்யா) அதிகபட்சம் தலா 6 முறை சாம்பியன் ஆகினர்.
* 'கிளாசிக்கல்' (18), 'பிடே' உலக சாம்பியன் தொடர் (1993-2006) என ஒட்டுமொத்தமாக இணைந்து, இதில் கோப்பை வென்ற 22வது வீரர் ஆனார் குகேஷ்.
பேடி ஆப்டன் 'அட்வைஸ்'
இந்திய அணி, கடந்த 2011ல் உலக கோப்பை (50 ஓவர்) கைப்பற்றியது. அப்போது அணியின் மனநல பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் பேடி ஆப்டன் இருந்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கும் இவர் தான் உதவினார். தற்போது நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் குகேஷிற்கு மனநல பயிற்சியாராக இருந்துள்ளார்.
இதனால் இத்தொடரில் இரு முறை தோற்ற போதும், குகேஷ் மனம் தளராமால் போராட, பேடி ஆப்டன் 'அட்வைஸ்' கைகொடுத்துள்ளது.
கைகொடுத்த சென்னை
சென்னையில் கடந்த 2023ல் கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடந்தது. இதில் பட்டம் வென்ற குகேஷ், கேண்டிடேட்ஸ் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றார். டொரன்டோவில் நடந்த இத்தொடரில் சாம்பியன் ஆன இளம் வீரர் ஆனார் குகேஷ். தவிர உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான மோதலில் களமிறங்கிய இளம் வீரர் ஆனார். தற்போது இளம் வயதில் உலக சாம்பியன் ஆன வீரர் என புதிய வரலாறு படைத்தார்.
பெருமையான தருணம்
இந்திய செஸ் ஜாம்பவான் ஆனந்த் கூறுகையில்,'' செஸ் உலகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமைப்படத்தக்க தருணமாக இது அமைந்துள்ளது. தனிப்பட்ட முறையில் எனக்கும் பெருமையாக உள்ளது. வாழ்த்துகள் குகேஷ்,'' என்றார்.
* ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் கூறுகையில்,'' வாழ்த்துகள் குகேஷ். கடைசி வரை கடுமையாக போராடினீர்கள். இந்த வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர் நீங்கள்,'' என்றார்.
ரூ. 11.03 கோடி
உலக சாம்பியன் ஆன குகேஷிற்கு கோப்பையுடன், ரூ. 11.03 கோடி பரிசுத் தொகை தட்டிச் சென்றார்.
நனவான கனவு
குகேஷ் கூறுகையில்,''உலக சாம்பியன் ஆக வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக கனவு கண்டேன். தற்போது இது நிறைவேறியது மகிழ்ச்சியாக உள்ளது. வெற்றி பெற்ற தருணம் உணர்ச்சிவசமாக இருந்தது. ஏனெனில் இந்த வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை,'' என்றார்.
18 வயது
தமிழகத்தின் சென்னையில் பிறந்தவர் குகேஷ். உலக யூத், ஆசிய யூத் சாம்பியன்ஷிப்பில் சாதித்துள்ளார். தற்போது 18 வயதில் அசத்திய இவர், செஸ் உலக சாம்பியன் ஆன இளம் வீரர் ஆனார். முன்னதாக 1985ல் ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ், 22 வயதில் சாம்பியன் ஆகி இருந்தார்.