ADDED : ஆக 24, 2026 11:36 PM

சின்சினாட்டி: அமெரிக்காவில், சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பைனலில், அமெரிக்காவின் கோகோ காப், ஜெசிகா பெகுலா மோதினர். இதில் கோகோ காப் 6-2, 6-4 என வெற்றி பெற்று, இத்தொடரில் 2வது முறையாக (2023, 2026) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஆண்கள் ஒற்றையர் பைனலில் பிரான்சின் ஆர்தர் பில்ஸ் 6-3, 1-6, 6-0 என, அமெரிக்காவின் பிரான்சஸ் டியாபோவை வீழ்த்தி, முதல் முறையாக மாஸ்டர்ஸ் பட்டம் வென்றார்.
பார்சிலோனா கலக்கல்
எல்சே: ஸ்பெயினில், 'லா லிகா' கோப்பை கால்பந்து 96வது சீசன் நடக்கிறது. எல்சே நகரில் நடந்த லீக் போட்டியில் பார்சிலோனா, எல்சே அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த பார்சிலோனா அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பார்சிலோனா சார்பில் கரீம் அடேயெமி, பெர்மின் லோபஸ் தலா 2, ராபின்ஹா ஒரு கோல் அடித்தனர். வில்லாரியல், அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதிய மற்றொரு போட்டி 2-2 என 'டிரா' ஆனது.
செரினாவின் புதிய ஜோடி
நியூயார்க்: அமெரிக்காவில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் வரும் ஆக. 31ல் துவங்குகிறது. இதன் கலப்பு இரட்டையரில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் ஜோடி பங்கேற்க 'வைல்டு கார்டு' சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செரினா, 2022க்கு பின் யு.எஸ்., ஓபனில் களமிறங்க உள்ளார்.
எக்ஸ்டிராஸ்
* ஹங்கேரியில் நடந்த கனிசா ஓபன் செஸ் தொடரில் இந்திய வீரர் பிரனேஷ் 19, சாம்பியன் பட்டம் வென்றார். தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்த பிரனேஷ், 9 சுற்றுகளின் முடிவில் 7.0 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றினார்.
* டில்லியில், வரும் 2028ல் (ஜன. 25-30) இந்திய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்க இருந்தது. ஆனால் ஜன. 26ல் டில்லியில் குடியரசு தின விழா நடக்க இருப்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தொடர் அசாம் மாநிலம் கவுகாத்திக்கு மாற்றப்பட்டது.
* பெங்களூருவில் நடக்கும் துலீப் டிராபி கிரிக்கெட் காலிறுதியில், கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 467 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய வடக்கு மண்டல அணி 111 ரன்னுக்கு சுருண்டு, 'பாலோ-ஆன்' பெற்றது. இரண்டாம் நாள் முடிவில், வடக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 7/0 ரன் எடுத்திருந்தது.
* புனேயில் நடந்த ஜூனியர் பெண்களுக்கான தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் பைனலில் ஹரியானா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
* பெங்களூருவில் நடந்த நட்பு கால்பந்து 2வது போட்டியில் இந்திய அணி (20 வயது) 1-0 என, ஏமன் அணியை வென்றது. இவ்விரு அணிகள் மோதிய முதல் போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.
