போல் வால்ட்: டுப்ளான்டிஸ் சாதனை * டைமண்ட் லீக் தடகள பைனலில்...
போல் வால்ட்: டுப்ளான்டிஸ் சாதனை * டைமண்ட் லீக் தடகள பைனலில்...
ADDED : செப் 14, 2024 11:48 PM

பிரசல்ஸ்: போல் வால்ட் போட்டியில் டுப்ளான்டிஸ் புதிய சாதனை படைத்தார்.
பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில், டைமண்ட் லீக் தடகள பைனல் நடக்கிறது. போல் வால்ட் போட்டியில் சுவீடனின் அர்மாண்ட் டுப்ளான்டிஸ் 24, களமிறங்கினார். சமீபத்திய பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் (6.25 மீ.,) வென்றார். சமீபத்தில் போலந்து டைமண்ட் லீக்கில் 6.26 மீ., உயரம் தாண்டி உலக சாதனை படைத்திருந்தார்.
இம்முறை 6.11 மீ., மட்டும் தாண்டி வெற்றி பெற்றார். இது டைமண்ட் லீக் பைனல் சாதனையாக அமைந்தது. இவர் கூறுகையில்,'' 6.11 மீ., உயரம் தாண்டியது சிறப்பு தான். உலக சாதனையுடன் ஒப்பிடும் போது, இது ஒன்றுமல்ல,'' என்றார்.
மாத்யூ அபாரம்
ஆஸ்திரேலிய வட்டு எறிதல் வீரர், பாரிஸ் ஒலிம்பிக் சாம்பியன் மாத்யூ டென்னி 69.96 மீ., துாரம் எறிந்து, 40 ஆண்டு டைமண்ட் லீக் சாதனையை முறியடித்தார். முன்னதாக 1984ல் செக்கோஸ்லோவாகியாவின் இம்ரிச் புகார், 69.94 மீ., துாரம் எறிந்து இருந்தார்.
ஜூலியன் அசத்தல்
பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன், செயின்ட் லுாசியாவின் ஜூலியன் ஆல்பிரட் (10.88 வினாடி), டைமண்ட் லீக் பைனலில் முதன் முறையாக முதலிடம் பிடித்தார். அமெரிக்காவின் ஷா காரி (11.23) 8வது இடம் பிடித்தார்.
ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் ஜமைக்காவின் அக்கீம் பிளேக் (9.93 வினாடி) முதலிடம் பிடிக்க, அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மான் (10.00), பிரட் கெர்லே (10.01) அடுத்த இரு இடம் பெற்றனர்.
பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் ஒலிம்பிக், உலக சாம்பியன் பவுலினோ (49.45 வினாடி, டொமினிகன் குடியரசு) தொடர்ந்து இரண்டாவது முறையாக டைமண்ட் லீக் பட்டம் வென்றார்.
அவினாஷ் ஏமாற்றம்
ஆண்களுக்கான 3000 மீ., ஸ்டீபிசேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சபிள் பங்கேற்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் 11வது இடம் பிடித்த அவினாஷ், நேற்று தனது 30வது பிறந்த நாளில் களமிறங்கிய இவர், எட்டாவது இடம் (8 நிமிடம், 17.09 வினாடி) பிடித்து ஏமாற்றினார்.
கென்யாவின் ஆமோஸ் செரம் (8:06.90), மொரோக்கோவின் சோபியான் (8:08.60), துனிஷியாவின் முகமது அமின் (8:09.68) முதல் மூன்று இடம் பிடித்தனர்.
