ADDED : ஏப் 18, 2026 10:44 PM

மாட்ரிட்: லாரஸ் விளையாட்டு அமைப்பு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி ஏப். 20ல், ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியை, 5 முறை லாரஸ் விருது பெற்ற செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் 38, சீன பனிச்சறுக்கு வீராங்கனை ஐலீன் கு 22, முதல் முறையாக இணைந்து தொகுத்து வழங்க உள்ளனர்.
ஆஸி., வீரர் முதலிடம்
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில், ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில் ஆஸ்திரேலியாவின் கவுட் கவுட் 18, பங்கேற்றார். பந்தய துாரத்தை 10.21 வினாடியில் கடந்த இவர், முதலிடம் பிடித்தார். இதன்மூலம் அமெரிக்காவில் வரும் ஆக. 5-9ல் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் (20 வயது) போட்டிக்கு தகுதி பெற்றார் கவுட்.
கோவன்ட்ரி அணி 'டிரா'
பிளாக்பர்ன்: இங்கிலாந்து கால்பந்து லீக் சாம்பியன்ஷிப் தொடருக்கான லீக் போட்டியில் கோவன்ட்ரி சிட்டி, பிளாக்பர்ன் ரோவர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என 'டிரா' ஆனது. இதுவரை விளையாடிய 43 போட்டியில், 25 வெற்றி, 11 'டிரா', 7 தோல்வி என, 86 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த கோவன்ட்ரி அணி, 25 ஆண்டுகளுக்கு பின், பிரிமியர் லீக் தொடரில் விளையாட தகுதி பெற்றது. கடைசியாக 2001ல் பங்கேற்றது.
எக்ஸ்டிராஸ்
* கொச்சியில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் கேளரா பிளாஸ்டர்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது.
* ஜெர்மனியில் நடக்கும் ஹம்பர்க் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில் இந்தியாவின் வீர் சோட்ரானி 2-3 (10-12, 11-9, 12-14, 11-9, 6-11) என்ற கணக்கில் பிரான்சின் பாப்டிஸ்ட் மசோட்டியிடம் தோல்வியடைந்தார்.
* பெங்களூருவில், வரும் ஏப். 26ல் 'வேர்ல்டு 10கே' ஓட்டம் நடக்கவுள்ளது. இதில், 'நடப்பு சாம்பியன்'களான இந்தியாவின் அபிஷேக் பால், சஞ்சீவனி ஜாதவ் உட்பட 35,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
* தென் கொரியாவில் நடக்கும் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் அரையிறுதியில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், ஜப்பானின் டகெரு யுசூகி ஜோடி 4-6, 7-6, 10-8 என, இந்தியாவின் ரித்விக், அர்ஜுன் ஜோடியை வீழ்த்தியது.
* டேராடூனில், ஜூனியர், யூத் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு (19 வயது) பைனலில் சிண்ட்ரெலா தாஸ் 4-1 என, திவ்யான்ஷி போவ்மிக்கை வீழ்த்தினார். ஏற்கனவே 17 வயதுக்கு உட்பட்ட ஒற்றையரிலும் சிண்ட்ரெலா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
