/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பறக்குமா பவினா கொடி: பாரிஸ் பாராலிம்பிக்கில்
/
பறக்குமா பவினா கொடி: பாரிஸ் பாராலிம்பிக்கில்
ADDED : ஆக 25, 2024 11:22 PM

புதுடில்லி: ''சீன வீராங்கனைகளில் சவாலை சமாளிப்பேன். பதக்கத்துடன் இந்தியா திரும்புவேன்,''என பவினா படேல் தெரிவித்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் (ஆக. 28-செப். 8) நடக்க உள்ளது. இந்தியா சார்பில் 84 விளையாட்டு நட்சத்திரங்கள், 95 அதிகாரிகள் (பயிற்சியாளர் உட்பட) என மொத்தம் 179 பேர் பாரிஸ் செல்கின்றனர். டேபிள் டென்னிசில் அசத்த பவினா படேல் 37, காத்திருக்கிறார். கடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் (2021), கிளாஸ் 4 பிரிவில் வெள்ளி வென்று சாதனை படைத்தார். பாரிஸ் மண்ணிலும் சாதிக்க காத்திருக்கிறார்.
குஜராத்தை சேர்ந்தவர் பவினா படேல். 12 மாத குழந்தையாக இருந்த போது போலியோ பாதிக்கப்பட, இவரால் நடக்க முடியவில்லை. 'ஆப்பரேஷன்' செய்தும் பலன் கிடைக்காததால், 'வீல் சேர்' வாழ்க்கைக்கு மாறினார். மனம் தளராமல் போராடிய இவருக்கு பாரா டேபிள் டென்னிஸ் மீது ஆர்வம் ஏற்பட்டது. டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி வெல்ல, வாழ்வில் வசந்தம் பிறந்தது.
நம்பிக்கை நாயகி: பவினா கூறுகையில்,'' சிறிய கிராமத்தில் பிறந்தேன். 'நீ ஒரு பெண்...உன்னால் என்ன செய்ய முடியும்' என பலரும் கேள்வி எழுப்பினர். எனது பெற்றோருக்கு நிறைய சிரமம் கொடுத்தேன். எங்கு சென்றாலும் என்னை தோளில் சுமந்து கொண்டு செல்வர். காலம் மெல்ல மாறியது. டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றதும், அனைவரும் பாராட்டினர். 'என்னால் முடியும் போது, அவர்களாலும் வாழ்க்கையில் சாதிக்க முடியும்' என்ற நம்பிக்கையை விதைத்துள்ளேன்.
டேபிள் டென்னிசில் பொதுவாக சீன வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்துவர். அவர்களும் மனிதர்கள் தான். இம்முறை சீன நட்சத்திரங்களை சமாளிக்க, எனது ஆட்ட பாணியை மாற்றியுள்ளேன். பாரிஸ் பாராலிம்பிக்கில் பதட்டப்படாமல் செயல்பட்டு, பதக்கத்தை வசப்படுத்துவேன்,''என்றார்.

