ADDED : மார் 29, 2026 09:36 PM

சுசூகா: ஜப்பானில், நடப்பு ஆண்டுக்கான 'கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1' கார்பந்தயத்தின் 3வது சுற்று நடந்தது. பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 28 நிமிடம், 03.403 வினாடியில் கடந்த 'மெர்சிடஸ்' அணியின் இத்தாலி வீரர் கிமி ஆன்டோனெல்லி 19, சாம்பியன் பட்டம் வென்றார். இது, இந்த ஆண்டு தொடர்ச்சியாக இவர் கைப்பற்றிய 2வது பட்டம். சமீபத்தில் சீன கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் கோப்பை வென்றிருந்தார். இரண்டாவது இடத்தை 'மெக்லாரன்' அணியின் ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கர் பியாஸ்ட்ரி கைப்பற்றினார்.
பெல்ஜியம் கோல் மழை
அட்லாண்டா: ஜார்ஜியாவில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் அமெரிக்கா, பெல்ஜியம் அணிகள் மோதின. கோல் மழை பொழிந்த பெல்ஜியம் அணி 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மெக்சிகோவில் நடந்த போர்ச்சுகல், மெக்சிகோ அணிகள் மோதிய போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. கிளாஸ்கோவில் நடந்த போட்டியில் ஜப்பான் அணி 1-0 என, ஸ்காட்லாந்தை வென்றது.
எக்ஸ்டிராஸ்
* மங்கோலியாவில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் நிகாத் ஜரீன், லவ்லினா, பூஜா ராணி, பிரீத்தி, பிரியா, அருந்ததி சவுத்ரி, சச்சின், தீபக், ஆகாஷ், லோகேஷ் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்கின்றனர்.
* சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில், 'கோலோ இந்தியா' பழங்குடியினர் விளையாட்டு நடக்கிறது. பளுதுாக்குதலில் (60 கிலோ), மிசோராம் வீரர் ஐசக் 16, தங்கம் வென்றார். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த இவர், முதுகுப்பகுதி காயத்தை பொருட்படுத்தாமல் 235 கிலோ பளுதுாக்கினார்.
* ஆமதாபாத்தில் நடந்த ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் சித்தார்த் ரவாத் 6-7, 1-6 என, சுவீடனின் லியோ போர்க்கிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.
