/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தமிழகத்துக்கு நான்கு பதக்கம்: கேலோ இந்தியா நீச்சல் போட்டியில்
/
தமிழகத்துக்கு நான்கு பதக்கம்: கேலோ இந்தியா நீச்சல் போட்டியில்
தமிழகத்துக்கு நான்கு பதக்கம்: கேலோ இந்தியா நீச்சல் போட்டியில்
தமிழகத்துக்கு நான்கு பதக்கம்: கேலோ இந்தியா நீச்சல் போட்டியில்
ADDED : ஜன 29, 2024 11:04 PM

சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு நீச்சல் போட்டியில் நேற்று தமிழகத்துக்கு ஒரு வெள்ளி உட்பட 4 பதக்கம் கிடைத்தது.
கேலோ இந்தியா யூத் விளையாட்டின் 6வது சீசன் சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் நடக்கிறது. சென்னையில் உள்ள தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நீச்சல் போட்டி நடக்கிறது. இதில் பெண்களுக்கான 400 மீ., தனிநபர் 'மெட்லே' பிரிவு பைனலில் இலக்கை 5 நிமிடம், 11.23 வினாடியில் அடைந்த தமிழகத்தின் ஸ்ரீநிதி நடேசன் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். ஏற்கனவே இவர், 200 மீ., 'பிரஸ்ட் ஸ்டிரோக்' (வெண்கலம்), 4x100 மீ., 'பிரீஸ்டைல் ரிலே' (வெள்ளி) பிரிவில் பதக்கம் வென்றிருந்தார்.
ஆண்களுக்கான 50 மீ., 'பேக் ஸ்டிரோக்' பிரிவு பைனலில் பந்தய துாரத்தை 27.02 வினாடியில் கடந்த தமிழகத்தின் நித்திக் நாதெல்லா வெண்கலம் வென்றார். ஏற்கனவே இவர், 100 மீட்டர் 'பேக் ஸ்டிரோக்' பிரிவில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.
பெண்களுக்கான 50 மீ., 'பேக் ஸ்டிரோக்' பிரிவு பைனலில் இலக்கை 31.2 வினாடியில் அடைந்த தமிழகத்தின் தீக் ஷா சிவக்குமார் 3வது இடம் பிடித்து வெண்கலத்தை தட்டிச் சென்றார். ஏற்கனவே இவர், 100 மீ., 'பேக் ஸ்டிரோக்' பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.
ஆண்களுக்கான 4x100 மீ., 'மெட்லே ரிலே' பைனலில் பந்தய துாரத்தை 4 நிமிடம், 02.87 வினாடியில் கடந்த தமிழக அணி வெண்கலத்தை தட்டிச் சென்றது. மகாராஷ்டிரா (3 நிமிடம், 56.99 வினாடி), கர்நாடகா (3 நிமிடம், 59.34 வினாடி) தங்கம், வெள்ளி வென்றன.
பளுதுாக்குதல்
சென்னை நேரு மைதானத்தில் பளுதுாக்குதல் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான 76 கிலோ எடைப்பிரிவில் தமிழகத்தின் ஹசினா ஷிரின் வெண்கலம் வென்றார்.
கால்பந்து
சென்னை பல்கலை.,யில் நடந்த ஆண்களுக்கான கால்பந்து அரையிறுதியில் பஞ்சாப், ஒடிசா அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி 1-0 என வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் மேகாலயா அணி 5-3 என ஜார்க்கண்ட் அணியை வென்றது. பைனலில் மேகாலயா, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.