ADDED : ஆக 15, 2026 10:21 PM

பர்மிங்காம்: இங்கிலாந்தின் பர்மிங்காமில், ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில், பந்தய துாரத்தை 19.95 வினாடியில் கடந்த ஜெர்மனியின் ஓவன் அன்சா தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, இத்தொடரில் இவரது 2வது பதக்கம். ஏற்கனவே 100 மீ., ஓட்டத்தில் வெண்கலம் வென்றிருந்தார். சமீபத்தில், ஊக்கமருந்து பரிசோதனைக்கு மறுத்ததாக கூறப்படும் இவருக்கு, சொந்த நாட்டில் தடை விதிக்கப்படும் அபாயம் உள்ளது.
வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி
சின்சினாட்டி: அமெரிக்காவில், சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், கொலம்பியாவின் எமிலியானா அராங்கோ மோதினர். இதில் வீனஸ் 2-6, 2-6 என தோல்வியடைந்தார். இது, வீனஸ் தொடர்ச்சியாக பெற்ற 13வது தோல்வி. மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் சோபியா கெனின் 1-6, 6-3, 6-3 என, ஜெர்மனியின் ஈவா லிஸ்சை வீழ்த்தினார். அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 7-5, 6-3 என ஆஸ்திரியாவின் சின்ஜா கிராசை வென்றார்.
எக்ஸ்டிராஸ்
* அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில், 'சின்க்யுபீல்டு' கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா (கறுப்பு), அமெரிக்காவின் சோ வெஸ்லி (வெள்ளை) மோதிய 5வது சுற்று, 26வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
* ஆஸ்திரேலியாவில் நடக்கும் பென்டிகோ ஓபன் சேலஞ்சர் ஸ்குவாஷ் அரையிறுதியில் இந்திய வீராங்கனை சான்யா வாட்ஸ் 2-3 (6-11, 11-8, 9-11, 11-8, 7-11) என, ஆஸ்திரேலியாவின் ரேச்சல் கிரின்ஹாமிடம் தோல்வியடைந்தார்.
* புனேயில், தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் இன்று துவங்குகிறது.
* உஸ்பெகிஸ்தானில், வரும் செப். 15-28ல் செஸ் ஒலிம்பியாட் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் அணியின் கேப்டன், பயிற்சியாளராக, மும்பையை சேர்ந்த 'பிடே' பயிற்சியாளரும், நடுவருமான பிரபுல் ஜவேரி நியமிக்கப்பட்டுள்ளார்.
* கொல்கட்டாவில் இன்று நடக்கவுள்ள துாரந்த் கோப்பை கால்பந்து தொடருக்கான காலிறுதியில், ஈஸ்ட் பெங்கால், இந்திய ராணுவ அணிகள் மோதுகின்றன.
* புனேயில், பெண்களுக்கான ஜூனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 16வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் கர்நாடகா அணி 6-1 என, உத்தரகாண்ட் அணியை வீழ்த்தியது. பீஹார் அணி 6-0 என, கோவாவை வென்றது. மிசோரம் அணி 2-0 என,கேரளாவை தோற்கடித்தது.
