ADDED : ஜூலை 27, 2024 11:32 PM

ஆண்களுக்கான ஹாக்கி 'ஏ' பிரிவு லீக் போட்டியில் பிரிட்டன், ஸ்பெயின் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இங்கிலாந்து 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 'பி' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' பெல்ஜியம் அணி 2-0 என அயர்லாந்தை வீழ்த்தியது.
டென்னிஸ்: ஸ்வியாடெக் அபாரம்
பெண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஜெசிகா பெகு மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 7-5, 6-3 என ருமேனியாவின் அனா போக்டானை வீழ்த்தினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-0, 6-1 என ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டெனை வீழ்த்தினார். ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 6-3, 6-1 என லெபானனின் ஹேடி ஹபிப்பை வென்றார்.
வாலிபால்: ஜெர்மனிக்கு ஜெயம்
ஆண்களுக்கான வாலிபால் 'சி' பிரிவு லீக் போட்டியில் ஜப்பான், ஜெர்மனி அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 2-3 (25-17, 23-25, 20-25, 30-28, 15-12) என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
கூடைப்பந்து: ஆஸி., அசத்தல்
ஆண்களுக்கான கூடைப்பந்து 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா 92-80 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஹேண்ட்பால்: எகிப்து வெற்றி
ஆண்களுக்கான ஹேண்ட்பால் 'பி' பிரிவு லீக் போட்டியில் ஹங்கேரி, எகிப்து அணிகள் மோதின. இதில் எகிப்து அணி 35-32 என வெற்றி பெற்றது. ஆண்களுக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ஸ்பெயின் அணி 25-22 என சுலோவேனியாவை வென்றது.
டைவிங்: சீனா ஆதிக்கம்
பெண்களுக்கான 3 மீ., நடன 'ஸ்பிரிங்போர்டு' டைவிங் பைனலில் சீனாவின் சாங் யானி, சென் யிவன் ஜோடி (337.68 புள்ளி) தங்கம் வென்றது. டோக்கியோ ஒலிம்பிக் டைவிங் போட்டியில் 7 தங்கம் வென்றது சீனா. இம்முறை சீன நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தினால் டைவிங் போட்டியில் மொத்தமுள்ள 8 தங்கத்தையும் கைப்பற்றலாம். லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (1984) டைவிங் போட்டியில் முதல் தங்கம் வென்ற சீனா, இதுவரை 47 தங்கம், 23 வெள்ளி, 10 வெண்கலம் வென்றுள்ளது.