/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி: இந்தியா மீண்டும் ஏமாற்றம்
/
ஹாக்கி: இந்தியா மீண்டும் ஏமாற்றம்
ADDED : ஏப் 07, 2024 09:46 PM

பெர்த்: இரண்டாவது ஹாக்கி போட்டியில் இந்திய அணி 2-4 என, ஆஸ்திரேலியாவிடம் மீண்டும் தோல்வியடைந்தது.
பிரான்சில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26- முதல் ஆக. 11 வரை நடக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. பெர்த்தில் இரண்டாவது போட்டி நடந்தது.
ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜெர்மி ஹேவர்டு ஒரு கோல் அடித்தார். இதற்கு 9வது நிமிடத்தில் இந்தியாவின் ஜக்ராஜ் சிங் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அசத்திய இந்திய அணிக்கு 30வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஆஸ்திரேலியாவுக்கு ஜெர்மி ஹேவர்டு (34வது நிமிடம்), ஜேக்கப் ஆண்டர்சன் (42வது), நாதன் எப்ராம்ஸ் (45வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். கடைசி நிமிடம் வரை போராடிய இந்திய வீரர்களால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 0-2 என பின்தங்கி உள்ளது. மூன்றாவது போட்டி ஏப். 10ல் நடக்கிறது.

