/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி: இளம் இந்தியா சாம்பியன் * பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தியது
/
ஹாக்கி: இளம் இந்தியா சாம்பியன் * பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தியது
ஹாக்கி: இளம் இந்தியா சாம்பியன் * பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தியது
ஹாக்கி: இளம் இந்தியா சாம்பியன் * பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தியது
ADDED : டிச 04, 2024 11:07 PM

மஸ்கட்: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்திய அணி சாம்பியன் ஆனது. நேற்று நடந்த பைனலில் பாகிஸ்தானை 5-3 என வீழ்த்தியது. இந்தியாவின் அராய்ஜீத் சிங், நான்கு கோல் அடித்தார்.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில், ஜூனியர் (21 வயது) ஆசிய கோப்பை ஹாக்கி 10வது சீசன் நடந்தது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 10 அணிகள், இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின.
நேற்று நடந்த பைனலில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. போட்டி துவங்கிய 3 வது நிமிடத்தில் பாகிஸ்தான் கேப்டன் ஹன்னன் ஷாகித், 'பீல்டு' கோல் அடித்தார். அடுத்த நிமிடம் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' கிடைத்தது. இதில் அராய்ஜீத் சிங் (4) கோல் அடித்து உதவினார்.
தொடர்ந்து கைகொடுத்த அராய்ஜீத் சிங், 18 வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பிலும் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்தில் இந்திய வீரர் தில்ராஜ் சிங் (19) 'பீல்டு' கோல் அடிக்க, மறுபக்கம் பாகிஸ்தானின் சபியன் (30) கோல் அடித்தார்.
முதல் பாதியில் இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது.
அராய்ஜீத் 'ஹாட்ரிக்'
இரண்டாவது பாதியில் பாகிஸ்தானின் சபியன் (39), 'பெனால்டி கார்னரில்' மற்றொரு கோல் அடிக்க, ஸ்கோர் 3-3 என சமன் ஆனது. 47 வது நிமிடத்தில் சக வீரரிடம் இருந்து பந்தை பெற்ற அராய்ஜீத் சிங், இப்போட்டியில் 'ஹாட்ரிக்' கோல் அடித்தார்.
இந்திய அணி 4-3 என முந்தியது. போட்டியின் 47 வது நிமிடம் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இம்முறை மறுபடியும் அசத்திய அராய்ஜீத் சிங், மற்றொரு கோல் அடித்தார். இப்போட்டியில் இவர் அடித்த நான்காவது கோல் இது. இத்தொடரில் இவரது 10வது கோல் ஆனது.
பாகிஸ்தான் தரப்பில் அடுத்தடுத்து போராடிய போதும், மீண்டும் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.இத்தொடரில் 'டாப்-7' இடம் பிடித்த இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஜூனியர் உலக கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்றன.
'ஹாட்ரிக்' கோப்பை
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி இந்திய அணி ஐந்தாவது முறையாக (2004, 2008, 2015, 2023, 2024) கோப்பை வென்றது. தவிர, 2015, 2023, 2024 என தொடர்ந்து மூன்றாவது முறையாக அசத்திய இந்தியா 'ஹாட்ரிக்' கோப்பை கைப்பற்றியது.
ஜப்பான் மூன்றாமிடம்
நேற்று நடந்த மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜப்பான் அணி, மலேசியாவை எதிர்கொண்டது. இதில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜப்பான் சார்பில் டனகா (7வது நிமிடம்), புஜிவாரா (9) தலா ஒரு கோல் அடித்தனர். மலேசிய தரப்பில் ஆஸ்மன் (23) கோல் அடித்தார்.