ஹாக்கி: இந்தியா கோல் மழை: இந்தோனேஷியாவை வீழ்த்தியது
ஹாக்கி: இந்தியா கோல் மழை: இந்தோனேஷியாவை வீழ்த்தியது
ADDED : செப் 05, 2026 11:22 PM

மொகி: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரை வெற்றியுடன் துவக்கியது இந்திய அணி. நேற்று தனது முதல் போட்டியில் 14-0 என இந்தோனேஷியாவை வீழ்த்தியது.
ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு ஜூனியர் அணிகளுக்கான (21 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள்) ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. சீனாவில் நடக்கும் 10வது சீசனில் 10 அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் இந்திய ஆண்கள் அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் இந்தோனேஷியாவை சந்தித்தது.
போட்டி துவங்கியது முதல் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. 5வது நிமிடம் முதல் கோல் அடித்தார் பிரப்தீப். அடுத்து 26, 30, 45, 52 வது நிமிடங்களிலும் அசத்திய இவர், 5 கோல் அடித்து மிரட்டினார்.
மற்றொரு வீரர் அன்மோல் எக்கா, 16, 35, 42, 51 வது நிமிடங்களில் என 4 கோல் அடித்தார். அஜீத் (20, 53, 53) தன் பங்கிற்கு மூன்று கோல் அடித்தார். ஹர்பால் (8), மவுரியா (59) தலா ஒரு கோல் அடித்து உதவினர். இந்தோனேஷிய தரப்பில் ஒரு கோல் கூட அடிக்கப்படவில்லை.
முடிவில் இந்திய அணி 14-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் தென் கொரிய அணி 16-0 என்ற கோல் கணக்கில் சீன தைபேவை சாய்த்தது.
புள்ளிப்பட்டியலில் தென் கொரியா (2 போட்டி, 2 வெற்றி, 6 புள்ளி), இந்தியா (1ல் 3 புள்ளி), 'டாப்-2' இடத்தில் உள்ளன.
பெண்கள் கலக்கல்
பெண்கள் பிரிவில் 10 அணிகள் பங்கேற்கின்றன. 'எலைட்' பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி, நேற்று தனது முதல் போட்டியில் 4 முறை சாம்பியன் ஆன தென் கொரியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சானிகா (8 வது நிமிடம்), பூர்ணிமா (30), சாஹூ (45), சிதார் (51) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
