/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி: காலிறுதிக்கு செல்லுமா இந்தியா * இன்று சுவிட்சர்லாந்துடன் பலப்பரீட்சை
/
ஹாக்கி: காலிறுதிக்கு செல்லுமா இந்தியா * இன்று சுவிட்சர்லாந்துடன் பலப்பரீட்சை
ஹாக்கி: காலிறுதிக்கு செல்லுமா இந்தியா * இன்று சுவிட்சர்லாந்துடன் பலப்பரீட்சை
ஹாக்கி: காலிறுதிக்கு செல்லுமா இந்தியா * இன்று சுவிட்சர்லாந்துடன் பலப்பரீட்சை
ADDED : டிச 01, 2025 11:33 PM

மதுரை: ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் இன்று இந்தியா, சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வென்று இந்திய அணி காலிறுதிக்கு முன்னேற காத்திருக்கிறது.
சென்னை, மதுரையில் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி, 14வது சீசன் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் 6 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறும்.
உலகத் தரவரிசையில் 'நம்பர்-2' ஆக உள்ள இந்திய அணி 'பி' பிரிவில் சிலி, ஓமன், சுவிட்சர்லாந்துடன் இடம் பெற்றுள்ளது. முதல் இரு போட்டியில் சிலி (7-0), ஓமனை (17-0) வீழ்த்திய இந்திய அணி, 6 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இன்று மதுரையில் நடக்கும் தனது கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. இதில் வெல்லும் பட்சத்தில் காலிறுதிக்கு முன்னேறலாம்.
முதல் இரு போட்டியில் இந்திய அணியில் கோல் ஏரியாவுக்கு பெரியளவு சிக்கல் ஏற்படவில்லை. ஆனால், கோல் கீப்பர்கள் பிரின்ஸ் தீப் சிங், பிக்ரம்ஜித் சிங்கிற்கு இன்று சோதனை காத்திருக்கிறது. கேப்டன் ரோகித், தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை தொடரலாம். பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் தடுமாற்றம் தொடர்கிறது. முதல் இரு போட்டியில் 6 கோல் அடித்த தில்ராஜ் சிங், கடந்த போட்டியில் 'ஹாட்ரிக்' கோல் அடித்த அர்ஷ்தீப் சிங் மீண்டும் கைகொடுக்கலாம்.
மறுபக்கம் சுவிட்சர்லாந்து அணி, தனது முதல் இரு போட்டியில் ஓமன் (4-0), சிலியை (3-2) வென்று, 6 புள்ளியுடன் பட்டியலில் இரண்டாவதாக உள்ளது. 2 போட்டியில் 7 கோல் மட்டும் அடித்துள்ள போதும், இன்று இந்தியாவுக்கு சவால் கொடுக்க முயற்சிக்கலாம்.
ஜெர்மனி 'ஹாட்ரிக்' வெற்றி
மதுரையில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, அயர்லாந்து அணிகள் மோதின. இதில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜெர்மனி தரப்பில் ஜெர்சம் (4, 50வது நிமிடம்) இரண்டு கோல் அடித்தார். கிளாண்டர் (34), கோசெல் (52), பிரன்ஸ் (53) தலா ஒரு கோல் அடித்தனர். அயர்லாந்து தரப்பில் டேல் (51) மட்டும் ஆறுதல் கோல் அடித்தார்.
இதையடுத்து தொடர்ந்து 3 போட்டியிலும் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற ஜெர்மனி, 9 புள்ளியுடன் பட்டியலில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.
* இதே பிரிவில் நடந்த கடைசி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 9-1 என கனடாவை வீழ்த்தியது. தென் ஆப்ரிக்க அணி 6 புள்ளியுடன் இரண்டாவது இடம் பிடித்தது. மற்ற போட்டிகளின் முடிவுக்கு ஏற்ப, காலிறுதி வாய்ப்பு குறித்து தெரியவரும்.
* சென்னையில் நேற்று நடந்த 'சி' பிரிவு போட்டியில் நியூசிலாந்து, ஜப்பான் அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தமிழக வீரர்கள் இல்லை
இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சியாளர் ஸ்ரீஜேஷ், கேப்டன் ரோகித் கூறுகையில்,''தற்போது ஜூனியர் உலகக்கோப்பையில் எங்களது முழுக்கவனத்தையும் செலுத்துகிறோம். காலிறுதிப் போட்டியில் யார் பங்கேற்பர் என்று இப்போது கூற முடியாது. இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதிக கோல் அடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம். போட்டியின் தேவைக்கேற்ப ஆட்டத்தை 'டிபன்ஸ், அட்டாக்' நிலைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.
இந்திய அணியில் தற்போது தமிழக வீரர்கள் இடம்பெறவில்லை. அதற்கான முயற்சி நடக்கிறது. பள்ளி அளவில் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வீரர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இது நீண்டகால முயற்சி. 2026 உலகக்கோப்பை, 2028 ஒலிம்பிக் போட்டி நடக்கும் போது இந்திய அணியில் தமிழக வீரர்கள் நிச்சயமாக இடம்பெறுவர்,'' என்றனர்.

