/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெண்கலம் வெல்லுமா இந்தியா * ஜூனியர் 'உலக' ஹாக்கியில் எதிர்பார்ப்பு
/
வெண்கலம் வெல்லுமா இந்தியா * ஜூனியர் 'உலக' ஹாக்கியில் எதிர்பார்ப்பு
வெண்கலம் வெல்லுமா இந்தியா * ஜூனியர் 'உலக' ஹாக்கியில் எதிர்பார்ப்பு
வெண்கலம் வெல்லுமா இந்தியா * ஜூனியர் 'உலக' ஹாக்கியில் எதிர்பார்ப்பு
ADDED : டிச 09, 2025 11:29 PM

சென்னை: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கியில் இன்று, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
சென்னை, மதுரையில், ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 14வது சீசன் நடக்கிறது. கடைசி நாளான இன்று 'டாப்-8' இடங்களை பெற போட்டிகள் நடக்கின்றன. சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடக்கும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.
லீக் சுற்றில் 100 சதவீத வெற்றி பெற்ற இந்திய அணி, காலிறுதியில் 'பெனால்டி ஷூட் அவுட்டில்' பெல்ஜியத்தை வென்றது. அரையிறுதியில் வலிமையான ஜெர்மனியிடம் தொடர்ந்து மூன்றாவது முறையாக (2021ல் 2-4, 2023ல் 1-4, 2025ல் 1-5) தோல்வியடைந்தது.
தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்தியதால், ஜெர்மனிக்கு எதிராக, இந்திய அணி எளிதாக கோல்களை விட்டுக் கொடுத்தது. தில்ராஜ் சிங், அர்ஷ்தீப் சிங், சவுரப் ஆனந்த், குர்ஜோத் சிங், அஜீத் யாதவ் என பலர் கோல் வாய்ப்புகளை ஏற்படுத்தினாலும், சரியான 'பினிஷிங்' கிடைக்கவில்லை.
'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் உள்ள பிரச்னை இன்னும் தீரவில்லை. இதனால், 2016க்குப் பின் மீண்டும் கோப்பை வெல்ல வேண்டும் என்ற கனவு கலைந்தது. இருப்பினும், இன்று அர்ஜென்டினாவை சாய்த்து, குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் பெற முயற்சிக்கலாம்.
மறுபக்கம் அர்ஜென்டினா அணி இரு முறை (2005, 2021) கோப்பை வென்றுள்ளது. வெற்றியை எளிதாக விட்டுத்தராது என்பதால், இந்திய அணிக்கு சவால் காத்திருக்கிறது.
பைனல் மோதல்
இரவு நடக்கும் பைனலில் 7 முறை சாம்பியன், உலகின் 'நம்பர்-1' ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆஸி., அணி ஆறுதல்
நேற்று சென்னையில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, 11 வது இடம் பெற்று ஆறுதல் அடைந்தது.
* 'பெனால்டி ஷூட் அவுட்டில்' ஜப்பானை வென்ற மலேசியா (3-0) 13வது இடம் பெற்றது. சிலி அணி 2-1 என சுவிட்சர்லாந்தை வீழ்த்தி, 15வது இடம் பிடித்தது.

