ADDED : ஆக 29, 2026 12:02 AM

வேவ்ரே: உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 8வது இடம் பிடித்தது.
பெல்ஜியத்தின் வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில், உலக கோப்பை ஹாக்கி 16வது சீசன் (ஆண்கள், பெண்கள் பிரிவு) நடக்கிறது. இந்திய ஆண்கள் அணி, இரண்டாவது சுற்றில் 'இ' பிரிவில் இடம் பெற்றது. இதில் 2 போட்டியிலும் தோற்ற இந்தியா, நான்காவது இடம் பிடித்து, அரையிறுதி வாய்ப்பை நழுவவிட்டது.
51 ஆண்டுக்குப் பின் உலக கோப்பை தொடரில் மீண்டும் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா. இதையடுத்து நேற்று நடந்த 7-8 வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி, 'எப்' பிரிவில் நான்காவது இடம் பிடித்த பெல்ஜியத்தை சந்தித்தது.
போட்டி துவங்கிய 6வது நிமிடத்தில் இந்திய வீரர் அபிஷேக், ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். போட்டியின் 22, 23வது நிமிடங்களில் பெல்ஜியம் அணியின் ரோமன், ஹியுகோ தலா ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா 1-2 என பின்தங்கியது.
போட்டியின் 31வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கோல் அடித்தார். மறுபக்கம் பெல்ஜியத்தின் நிக்கோலஸ் (47) கோல் அடித்தார். கடைசி நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் (60) கோல் அடிக்க, போட்டி 3-3 என சமன் ஆனது.
வெற்றியாளரை முடிவு செய்ய 'ஷூட் ஆப்' நடந்தது. இதில் இந்தியா 3-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து, 8வது இடம் பிடித்தது.
ஆஸி., 'ஐந்து'
நேற்று நடந்த 5-6வது இடத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் கோவர்ஸ் (30வது நிமிடம்), வில்லாட் (48) கோல் அடித்து கைகொடுக்க, 2-0 என வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, ஐந்தாவது இடம் பிடித்தது. நியூசிலாந்து அணி 6-3 என அயர்லாந்தை வென்று, 9வது இடம் பெற்றது.
