/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசியாவில் 'தங்கம்'...சவிதா சபதம் * இலக்கை நோக்கி ஹாக்கி பயணம்
/
ஆசியாவில் 'தங்கம்'...சவிதா சபதம் * இலக்கை நோக்கி ஹாக்கி பயணம்
ஆசியாவில் 'தங்கம்'...சவிதா சபதம் * இலக்கை நோக்கி ஹாக்கி பயணம்
ஆசியாவில் 'தங்கம்'...சவிதா சபதம் * இலக்கை நோக்கி ஹாக்கி பயணம்
ADDED : ஜன 05, 2026 11:33 PM

புதுடில்லி: ''ஆசிய விளையாட்டு ஹாக்கியில் தங்கம் வென்று, ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதே இந்தியாவின் இலக்கு,'' என சவிதா புனியா தெரிவித்தார்.
இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் சவிதா புனியா, 35. அனுபவ வீராங்கனையான இவர், 2011ல் அறிமுகமானார். எதிரணியின் கோல் வாய்ப்புகளை துடிப்பாக தடுப்பதால், 'பெருஞ்சுவர்' என அழைக்கப்படுகிறார். இந்திய அணிக்காக 308 போட்டியில் பங்கேற்றுள்ளார். 2022ல் காமன்வெல்த் விளையாட்டில் வெண்கலம், ஆசிய விளையாட்டில் 3 முறை (2018, 14, 22) பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர். டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) இந்தியா 4வது இடம் பெற முக்கிய காரணமாக இருந்தார்.
எதிர்கால திட்டம் பற்றி ராஜஸ்தானை சேர்ந்த சவிதா புனியா கூறியது:
வாழ்க்கையில் இலக்குகளை நிர்ணயித்து கொள்வது எனது வழக்கம். இந்த ஆண்டு ஜப்பானில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு (செப்.19-அக்.4), ஹாக்கியில் சாதிப்பது முக்கியமானது. தங்கம் வெல்வதே எனது ஒரே இலக்கு. இதன் மூலம் 2028ல் லாஸ் ஏஞ்சல்சில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணி நேரடியாக தகுதி பெறலாம். தங்கம் வெல்வதற்கான திறமை நமது அணியிடம் உள்ளது. 'சீனியர்' வீராங்கனை என்ற முறையில், அணிக்கு தேவையான ஊக்கம் அளிப்பேன்.
தகுதிச் சுற்றில் விளையாடி ஒலிம்பிக் போட்டிக்கு வாய்ப்பு பெறுவது கடினமான அனுபவம். இதை தவிர்க்க வேண்டுமானால், ஆசியாவில் தங்கம் வெல்வது அவசியம். உலக கோப்பை ஹாக்கி போட்டியும் நடக்க இருப்பதால், இந்த ஆண்டு மிகவும் 'பிசி'யாக இருக்கும்.
வயது தடையில்லை
என்னை பொறுத்தவரை முடியாதது என்று எதுவுமில்லை. 35 வயதிலும் உடல் அளவில் 'பிட்' ஆக இருக்கிறேன். எனது வயதை கேட்டதும், வெளிநாட்டு வீராங்கனைகள் அதிர்ச்சி அடைவர். திருமணம் முடிந்து, 3 ஆண்டுகளுக்கு பிறகும் விளையாடி வருகிறேன். நல்ல உடற்தகுதியுடன் இருந்தால், 40 வயதிலும் விளையாடலாம். நான் கோல்கீப்பர் என்பதால், எப்போதும் துடிப்பாக இருக்க வேண்டும்.
ஓய்வு எண்ணம்
குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவிட விரும்புகிறேன். ஒவ்வொரு வீராங்கனையும் ஒரு கட்டத்தில் ஓய்வை அறிவிக்க நேரிடும். லாஸ் ஏஞ்சல்ஸ் (2028) ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. இதில் பங்கேற்பது பற்றி அதிகம் சொல்ல முடியாது. இப்போதைக்கு ஆசிய விளையாட்டை கடந்து சிந்திக்கவில்லை. ஆசிய விளையாட்டு ஹாக்கியில் இந்தியா தங்கம் வென்று, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் சிறப்பான தருணத்தில் ஓய்வை அறிவிக்கலாம் என எண்ணுகிறேன்.
இவ்வாறு சவிதா புனியா கூறினார்.

