வரலாறு படைத்தது இந்தியா: ஒலிம்பிக் டேபிள் டென்னிசிற்கு தகுதி
வரலாறு படைத்தது இந்தியா: ஒலிம்பிக் டேபிள் டென்னிசிற்கு தகுதி
ADDED : மார் 04, 2024 10:43 PM

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிக்கு இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் முதன்முறையாக தகுதி பெற்றன.
தென் கொரியாவில் உலக டேபிள் டென்னிஸ் (அணிகள்) சாம்பியன்ஷிப் சமீபத்தில் நடந்தது. இதில் காலிறுதிக்கு முன்னேறிய அணிகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு (ஜூலை 26 - ஆக. 11) தகுதி பெற்றன. சரத் கமல் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி, 'ரவுண்டு-16' போட்டியில் தென் கொரியாவிடம் வீழ்ந்தது. மணிகா பத்ரா வழிநடத்திய இந்திய பெண்கள் அணி 'ரவுண்டு-16' போட்டியில் 1-3 என சீனதைபே அணியிடம் தோல்வியடைந்தது. இதனையடுத்து நேரடியாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறத்தவறின.
இந்நிலையில் தரவரிசை அடிப்படையில் மீதமுள்ள இடங்களுக்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டன. இதன்படி பெண்கள் பிரிவில் தாய்லாந்து (11வது இடம்), போலந்து (12வது இடம்), இந்தியா (13வது), சுவீடன் (15வது) அணிகள் ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றன. ஆண்கள் பிரிவில் சுலோவேனியா (11வது இடம்), குரோஷியா (12வது), இந்தியா (15வது) அணிகள் தகுதி பெற்றன. இதன்மூலம் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் முதன்முறையாக தகுதி பெற்று புதிய வரலாறு படைத்தன.
இதுகுறித்து சரத் கமல் கூறுகையில், ''ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணிகள் தகுதி பெற்றது மகிழ்ச்சி. நீண்ட நாள் கனவு நனவானது. இது சிறந்த தருணம். ஒலிம்பிக்கில் 5வது முறையாக பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,'' என்றார்.
