ADDED : மே 29, 2024 10:47 PM

பார்னு: எஸ்தோனியா போட்டியில் இந்தியாவின் ஷைலி சிங் வெண்கலம் வென்றார்.
எஸ்தோனியாவின் பார்னு பீச் மைதானத்தில், உலக தடகள கான்டினென்டல் போட்டி நடந்தது. இதில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியா சார்பில் இளம் வீராங்கனை ஷைலி சிங் 20, பங்கேற்றார். இவர் அதிகபட்சம் 6.42 மீ., துாரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.
கொலம்பியாவின் நடாலியா (6.58 மீ.,), எஸ்தோனியாவின் லிசா மரியா (6.45 மீ.,) முதல் இரு இடம் பிடித்து, தங்கம், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினர்.
ஒலிம்பிக் வாய்ப்பு
உ.பி.,யை சேர்ந்தவர் ஷைலி சிங். கடந்த 2023 பெங்களூரு கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் அதிகபட்சம் 6.76 மீ., துாரம் தாண்டி அசத்தினார். பாரிஸ் ஒலிம்பிக் செல்ல 6.86 மீ., துாரம் தாண்ட வேண்டும்.
தற்போதுள்ள நிலையில் ஒலிம்பிக் தகுதி தரவரிசையில் ஷைலி சிங், 43வது இடத்தில் (1185 புள்ளி) உள்ளார். 'டாப்-32' பட்டியலில் இடம் பெற்றால் பாரிஸ் செல்லலாம் என்பதால், ஷைலி சிங் வாய்ப்பு சந்தேகமாக உள்ளது. மற்றொரு இந்திய வீராங்கனை ஆன்சி சோஜன் (1183), 45வதாக உள்ளார்.
தேஜாஸ் அபாரம்
ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தில் இந்திய வீரர் தேஜாஸ் ஷிர்சே பங்கேற்றார். இவர் 13.84 வினாடி நேரத்தில் வந்து மூன்றாவது இடம் பிடிக்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது. பிரேசில் வீரர்கள் தியாகோ (13.59 மீ.,), கேபிரியல் (13.63 மீ.,) தங்கம், வெள்ளிப்பதக்கம் வென்றனர்.