/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெண்கலம் வென்றது இந்தியா: உலக பல்கலை விளையாட்டில்
/
வெண்கலம் வென்றது இந்தியா: உலக பல்கலை விளையாட்டில்
ADDED : ஜூலை 20, 2025 11:47 PM

ரினே--ருஹ்ர்: உலக பல்கலை., விளையாட்டு பாட்மின்டனில் இந்திய அணி வெண்கலம் கைப்பற்றியது.
ஜெர்மனியில், உலக பல்கலை., விளையாட்டு 32வது சீசன் நடக்கிறது. இதில் 114 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியாவின் 90 பல்கலை.,யில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் விளையாடுகின்றனர்.
இந்தியா 'வெண்கலம்': பாட்மின்டன் கலப்பு அணிகளுக்கான அரையிறுதியில் இந்தியா, சீனதைபே மோதின. ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன் 1-2 என சீனதைபேயின் சு லி யாங்கிடம் தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையரில் தேவிகா சிஹாக் (இந்தியா) 2-0 என சிங் பிங் ஹுவாங்கை (சீனதைபே) தோற்கடித்தார். இரட்டையரில் இந்தியாவின் சனீத் தயானந்த்-சதிஷ், தஸ்னிம் மிர்-வர்ஷிணி ஸ்ரீ ஜோடி தோல்வியடைந்தன. முடிவில் இந்திய அணி 1-3 என தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றியது. இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம்.
நடராஜ் சாதனை: ஆண்கள் நீச்சல் போட்டி 100 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் பங்கேற்றார். 'ஹீட்-6ல்' களமிறங்கிய இவர், 49.46 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். ஸ்ரீஹரி நடராஜ், அரையிறுதிக்குள் நுழைந்தார். தவிர இவர், 100 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் பந்தய துாரத்தை அதிவேகமாக கடந்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.
ஆண்களுக்கான 50 மீ., 'பேக்ஸ்டிரோக்' பிரிவு தகுதிச் சுற்றில் 10வது இடம் பிடித்த ஸ்ரீஹரி நடராஜ் (25.59 வினாடி) அரையிறுதிக்கு முன்னேறினார்.
வைஷ்ணவி வெற்றி: டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் வைஷ்ணவி, அதர்வா சர்மா ஜோடி 2-0 (6-1, 6-4) என கொலம்பியாவின் ரெய்னா கேசிலோ, கான்சலஸ் டோரஸ் ஜோடியை வீழ்த்தியது.