ADDED : மே 10, 2026 08:44 PM

ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தையில், தீபிகா குமாரி தலைமையிலான இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது.
சீனாவின் ஷாங்காய் நகரில், உலக கோப்பை வில்வித்தை 'ஸ்டேஜ்-2' தொடர் நடந்தது. பெண்களுக்கான 'ரிகர்வ்' பிரிவு பைனலில் இந்தியா, சீனா அணிகள் மோதின. இந்தியா சார்பில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கும்கும் அனில் மோஹோத் பங்கேற்றனர். முதல் நான்கு செட்களின் முடிவில் போட்டி 4-4 (54-53, 52-55, 56-57, 54-53) என சமநிலை வகித்தது. பின் போட்டியின் முடிவு 'ஷூட் ஆப்' முறைக்கு சென்றது. இதில் எழுச்சி கண்ட இந்திய அணி 28-26 என கைப்பற்றியது. முடிவில் இந்திய அணி 5-4 (54-53, 52-55, 56-57, 54-53, 28-26) என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம், 2வது பதக்கம் ஆனது. ஏற்கனவே தனிநபர் 'காம்பவுண்டு' பிரிவில் இந்திய வீரர் சாஹில் ஜாதவ் வெண்கலம் வென்றிருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு பின், உலக கோப்பை 'ரிகர்வ்' பிரிவில் இந்திய பெண்கள் அணி பதக்கம் வென்றது. கடைசியாக 2023ல் பாரிசில் நடந்த 'ஸ்டேஜ்-4'ல் வெண்கலம் வென்றிருந்தது. இதில் அங்கிதா பகத் இடம் பெற்றிருந்தார்.
தவிர இது, உலக கோப்பை 'ரிகர்வ்' பிரிவில் தீபிகா குமாரி வென்ற 12வது தங்கம். அணிகள் பிரிவில் 7, தனிநபர் பிரிவில் 4, கலப்பு அணிகள் பிரிவில் ஒரு தங்கம் வென்றுள்ளார். உலக கோப்பை அரங்கில் அதிக தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகள் வரிசையில் முதலிடத்தை ஜோதி சுரேகாவுடன் (12 தங்கம்) பகிர்ந்து கொண்டார் தீபிகா.
சிம்ரன்ஜீத் ஏமாற்றம்: பெண்களுக்கான தனிநபர் 'ரிகர்வ்' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர், தென் கொரியாவின் காங் சேயங் மோதினர். இதில் ஏமாற்றிய சிம்ரன்ஜீத் 0-6 (25-26, 24-29, 26-28) என்ற கணக்கில் தோல்வியடைந்தார். அடுத்து நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் சிம்ரன்ஜீத் கவுர் 4-6 (29-27, 27-29, 28-28, 28-29, 28-28) என, தென் கொரியாவின் ஜாங் மின்ஹீயிடம் தோல்வியடைந்தார்.
