/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
நீரஜ் சோப்ரா 2வது இடம் * டைமண்ட் லீக் தடகள பைனலில்...
/
நீரஜ் சோப்ரா 2வது இடம் * டைமண்ட் லீக் தடகள பைனலில்...
நீரஜ் சோப்ரா 2வது இடம் * டைமண்ட் லீக் தடகள பைனலில்...
நீரஜ் சோப்ரா 2வது இடம் * டைமண்ட் லீக் தடகள பைனலில்...
ADDED : ஆக 29, 2025 11:03 PM

ஜூரிச்: டைமண்ட் லீக் தடகள பைனலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இரண்டாவது இடம் பிடித்தார் நீரஜ் சோப்ரா.
உலக தடகள கூட்டமைப்பு சார்பில் டைமண்ட் லீக் போட்டி நடத்தப்படுகிறது. இதன் 16வது சீசன் பைனல், சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் நடந்தது. ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா உட்பட, 7 பேர் பங்கேற்றனர். டோக்கியோ (2021, தங்கம்), பாரிஸ் (2024, வெள்ளி) என அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மீது எதிர்பார்ப்பு இருந்தது.
முதல் இரு வாய்ப்பில் 84.35, 82.00 மீ., துாரம் மட்டும் எறிந்த இவர், அடுத்த 3 வாய்ப்புகளில் பவுல் செய்தார். கடைசி, 6வது வாய்ப்பில் அதிகபட்சம் 85.01 மீ., துாரம் மட்டும் எறிந்த போதும், இரண்டாவது இடம் பிடித்தார்.
ஜெர்மனியின் ஜூலியன் வெபர், அதிகபட்சம் 91.51 மீ., துாரம் எறிய, முதன் முறையாக டைமண்ட் லீக் பட்டத்தை கைப்பற்றினார்.
கெஷ்கார்ன் வால்காட் (டிரினிடாட் அண்டு டுபாகோ, 78.30 மீ.,) மூன்றாவது இடம் பிடித்தார்.
மூன்றாவது முறை
டைமண்ட் லீக் தடகள பைனலில் 2022ல் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா. கடந்த 2023 (83.80 மீ.,), 2024 (87.86 மீ.,), தற்போது 2025 (85.01 மீ.,) என தொடர்ந்து மூன்றாவது முறையாக இரண்டாவது இடம் பெற்றார்.
26 பதக்கம்
கடந்த 2021 பின்லாந்து போட்டியில் நீரஜ் சோப்ரா, 3வது இடம் பிடித்தார். இதன் பின் களமிறங்கிய 26 போட்டிகளில் தொடர்ந்து 'டாப்-2' பட்டியலில் இடம் பெற்று, பதக்கம் வென்றார். அதிகபட்சம் கத்தாரில் 90.23 மீ., (2025) துாரம் எறிந்துள்ளார்.