/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தடகளம்: 2 தங்கம் வென்றார் வித்யா
/
தடகளம்: 2 தங்கம் வென்றார் வித்யா
ADDED : மே 30, 2024 10:55 PM

சென்னை: கிராண்ட் பிரிக்ஸ் தடகளத்தில் வித்யா இரண்டு தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ்-2 தடகள போட்டி நேற்று சென்னையில் நடந்தது. பெண்களுக்கான போல் வால்ட் போட்டியில் தமிழகத்தின் பரனிகா 4.00 மீ., உயரம் தாண்டி, தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். கேரளாவின் மரியா (3.90 மீ.,), தமிழகத்தின் கார்த்திகா (3.10 மீ.,) அடுத்த இரு இடம் பிடித்தனர்.
வித்யா அபாரம்
பெண்களுக்கான 400 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா (57.28 வினாடி) தங்கம் வென்றார். 400 மீ., ஓட்டத்திலும் அசத்திய வித்யா(53.00) இரண்டாவது தங்கம் கைப்பற்றினார். ஆண்களுக்கான 400 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் சந்தோஷ் குமார் (50.14 ) வெள்ளி கைப்பற்றினார். தமிழகத்தின் சதிஷ் (51.46 ) வெண்கலம் வென்றார். கேரளாவின் ஜபிர் (49.94 ) தங்கம் வசப்படுத்தினார். பின், 400 மீ., ஓட்டத்தில் சந்தோஷ் குமார்(46.46) தங்கம் வென்றார். தமிழகத்தின் அவினாஷ் (47.30 மீ.,) வெள்ளி கைப்பற்றினார்.
ஈட்டி எறிதலில் தமிழக வீராங்கனை ஹேமமாலினி (47.47 மீ.,) வெள்ளி வென்றார். பீஹாரின் அஞ்சானி குமாரி (47.75 மீ.,), ராஜஸ்தானின் லலிதா (42.09 மீ.,) முதல், மூன்றாவது இடம் பிடித்தனர்.
மானவ் தங்கம்
பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தமிழகத்தின் ஷர்மிளா (12.90 மீ.,), வைஷ்ணவி (12.82 மீ.,) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். மஹாராஷ்டிராவின் அபா கதுவா (17.13 மீ.,) தங்கம் வென்றார். பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் நீலாம்பரி, 4 நிமிடம், 24.16 வினாடி நேரத்தில் வந்து தங்கம் கைப்பற்றினார். இளவரசி (4 நிமிடம், 26.96 வினாடி) மூன்றாவதாக வந்தார்.
ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் ('பி' பிரிவு) தமிழகத்தின் மானவ் (21.70 வினாடி), சந்தோஷ் (21.94), மனோஜ் குமார் (22.19) முதல் மூன்று இடம் பிடித்தனர்.
யுகேந்திரன் கலக்கல்
ஆண்களுக்கான போல் வால்ட் போட்டியில் தமிழகத்தின் 20 வயது வீரர் யுகேந்திரன், 5.20 மீ., உயரம் தாண்டி தங்கம் கைப்பற்றினார். இது இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ்-2 தடகளத்தில் சாதனை ஆனது. தவிர, 5.20 மீ., அல்லது அதற்கும் மேல் தாண்டிய இரண்டாவது இந்தியர் ஆனார். இதற்கு முன் சிவ சுப்ரமணி, 5.31 மீ., (2022) தாண்டினார்.