இந்திய ஜோடி 'வெள்ளி': 'பாரா' உலக துப்பாக்கி சுடுதலில்
இந்திய ஜோடி 'வெள்ளி': 'பாரா' உலக துப்பாக்கி சுடுதலில்
ADDED : மார் 10, 2024 11:02 PM

புதுடில்லி: 'பாரா' உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மோனா அகர்வால், ஆதித்யா கிரி ஜோடி வெள்ளி வென்றது.
டில்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. கலப்பு அணிகளுக்கான 'ஏர் ரைபிள் ஸ்டேன்டிங்-எஸ்.எச். 1' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் மோனா அகர்வால் (315.4), ஆதித்யா கிரி (307.5) ஜோடி 622.9 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தது.
அடுத்து நடந்த பைனலில் இந்தியா, சீனா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 4-16 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. இது, இத்தொடரில் மோனா வென்ற 2வது பதக்கம். ஏற்கனவே 10 மீ., 'ஏர் ரைபிள்' தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற இவர், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
இப்பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் அவனி லேகரா, மகாவீர் ஸ்வரூப் ஜோடி 4-16 என உக்ரைன் ஜோடியிடம் தோல்வியடைந்து பதக்க வாய்ப்பை இழந்தது. தகுதிச் சுற்றில் அவனி (310.9), ஸ்வரூப் (308.6) ஜோடி 619.5 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்தது.
கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்-எஸ்.எச். 1' பிரிவு பைனலில் இந்தியாவின் மணிஷ் நார்வல், ரூபினா பிரான்சிஸ் ஜோடி 12-16 என சீன ஜோடியிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றது. இப்பிரிவின் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பக்தி சர்மா, ருத்ரான்ஷ் 16-8 என கியூபா ஜோடியை வீழ்த்தி வெண்கலத்தை கைப்பற்றியது.
