ADDED : மார் 18, 2025 11:13 PM

ஜலந்தர்: இந்திய ஹாக்கி வீரர் மன்தீப் சிங், வீராங்கனை உதித்தா இடையே திருமணம் நடக்கவுள்ளது.
இந்திய ஹாக்கி அணியின் முன்கள வீரர் மன்தீப் சிங் 30. பஞ்சாப்பின் ஜலந்தரில் உள்ள மித்தாபூரை சேர்ந்தவர். 2021ல் டோக்கியோவில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர். 2024ல் பஞ்சாப் போலீசில் டி.எஸ்.பி., யாக நியமிக்கப்பட்டார். இதுபோல, இந்திய ஹாக்கி தற்காப்பு வீராங்கனை உதித்தா துஹான் 27. கடந்த 2017ல் அறிமுகம் ஆன இவர், 127 போட்டியில் 14 கோல் அடித்துள்ளார். ஹரியானாவின் ஹிசாரை சேர்ந்த இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடம் பிடித்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.
நட்பு எப்படி
கடந்த 2018ல் ஹரியானாவில் இருவரும் முதன் முறை சந்தித்தனர். கொரோனா காலத்தில் பெங்களூரு தேசிய அகாடமியில் தங்கியிருந்த போது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இவர்களது திருமணம், மார்ச் 21ல் ஜலந்தரில் நடக்க உள்ளது.
இந்தியாவின் விளையாட்டு ஜோடிகளான தீபிகா குமாரி-அடானு தாஸ் (வில்வித்தை), ஆகாஷ்தீப்-மோனிகா மாலிக் (ஹாக்கி), செய்னா நேவல்-காஷ்யப் (பாட்மின்டன்) வரிசையில், மன்தீப் சிங்-உதித்யா இணைய உள்ளனர்.