ADDED : பிப் 25, 2026 10:50 PM

இன்டர் மிலன் அதிர்ச்சி
மிலன்: இத்தாலியில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து 'பிளே-ஆப்' போட்டியில், இத்தாலியின் இன்டர் மிலன் அணி 2-5 (1-3, 1-2) என்ற கணக்கில் நார்வேயின் போடோ - கிளிம்ட் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது. போடோ - கிளிம்ட் அணி முதன்முறையாக 'ரவுண்டு-16' போட்டிக்கு முன்னேறியது. மற்ற 'பிளே-ஆப்' போட்டிகளில் நியூகேசில் யுனைடெட் (இங்கிலாந்து), அத்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்), பேயர் லெவர்குசன் (ஜெர்மனி) அணிகள் வெற்றி பெற்றன.
வீனஸ், பியான்கா தோல்வி
ஆஸ்டின்: அமெரிக்காவில் நடக்கும் ஏ.டி.எக்ஸ்., ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச் மோதினர். இதில் ஏமாற்றிய வீனஸ் 4-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். மற்றொரு போட்டியில் கனடாவின் பியான்கா 3-6, 7-5, 4-6 என்ற கணக்கில் ஹங்கேரியின் டால்மா கால்பியிடம் போராடி தோல்வியடைந்தார்.
எக்ஸ்டிராஸ்
* ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் நடந்த 'கேலோ இந்தியா' குளிர்கால விளையாட்டில், 9 தங்கம் கைப்பற்றிய இராணுவ அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இமாச்சல பிரதேச அணி (4 தங்கம்) 2வது இடம் பிடித்தது.
* சிங்கப்பூர் 'ஸ்மாஷ்' டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் தியா, மனுஷ் ஷா ஜோடி 0-3 (6-11, 9-11, 5-11) என்ற கணக்கில் பிரேசிலின் ஹுகோ கால்டிரானோ, புருனா டகாஹஷி ஜோடியிடம் தோல்வியடைந்தது.
* ஜெர்மனி ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா 21-19, 9-21, 19-21 என, அமெரிக்காவின் பீவன் ஜாங்கிடம் தோல்வியடைந்தார். மற்ற முதல் சுற்றில் இந்தியாவின் ரக் ஷிதா, தஸ்னிம் மிர், ஜார்ஜ் கிரண் தோல்வியடைந்தனர்.
* துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இரட்டையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ராம்குமார் ராமநாதன் ஜோடி 6-4, 5-7, 3-10 என பிரான்சின் தியோ அரிபேஜ், அல்பானோ ஒலிவெட்டி ஜோடியிடம் வீழ்ந்தது.
* கோவாவில் இன்று நடக்கவுள்ள ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் டில்லி, கோவா அணிகள் மோதுகின்றன.
* கர்நாடகாவில் நடக்கவுள்ள ஐ.டி.எப்., டென்னிஸ் (மார்ச் 1-8) ஒற்றையரில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி அத்கர் பங்கேற்கிறார்.

