ADDED : ஏப் 12, 2026 11:25 PM

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில், சர்வதேச மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் பந்தய துாரத்தை 2 மணி நேரம், 05 நிமிடம், 18 வினாடியில் கடந்த இத்தாலி வீரர் கிரிப்பா, முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அடுத்த இரு இடங்களை எத்தியோப்பியாவின் பயேலின் தெஷாகர் (2 மணி நேரம், 05 நிமிடம், 23 வினாடி), கென்யாவின் சிலா கிப்டோ (2 மணி நேரம், 5 நிமிடம், 28 வினாடி) கைப்பற்றினர்.
பார்சிலோனா கோல் மழை
பார்சிலோனா: ஸ்பெயினில், 'லா லிகா' கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பார்சிலோனா, ஸ்பான்யால் அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த பார்சிலோனா அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் செவில்லா அணி 2-1 என்ற கோல் கணக்கில் அத்லெடிகோ மாட்ரிட் அணியை வென்றது. வாலன்சியா அணி 0-1 என, எல்சே அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
எக்ஸ்டிராஸ்
* ராஞ்சியில் நடந்த பெண்களுக்கான சப் ஜூனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் பைனலில் ஜார்க்கண்ட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஒடிசா அணி 4-2 என, உ.பி., அணியை வீழ்த்தி வெண்கலம் கைப்பற்றியது.
* அந்தமானில் நடக்கும் 'லிட்டில் அந்தமான் புரோ' அலைச்சறுக்கு போட்டியில் இந்தியாவின் சிவராஜ் பாபு (13.63 புள்ளி) சாம்பியன் பட்டம் வென்றார். அடுத்த இரு இடங்களை ஸ்ரீகாந்த் (13.33), கிஷோர் குமார் (12.87) பிடித்தனர். பெண்கள் பிரிவில் இந்தியாவின் கமலி (15.83) சாம்பியன் ஆனார்.
* குரோஷியாவில் நடந்த சர்வதேச செஸ் தொடரின் கடைசி சுற்றை 'டிரா' செய்த இந்தியாவின் ஷிவிகா ரோஹில்லா 18, பெண்களுக்கான சர்வதேச மாஸ்டர் (டபிள்யு.ஐ.எம்.,) அந்தஸ்தை பெற்றார்.
* ஸ்பெயினில் நடக்கும் மெனார்கா சர்வதேச செஸ் தொடரின் கடைசி சுற்றை 'டிரா' செய்த இந்தியாவின் ஆரித் கபில், சர்வதேச மாஸ்டர்ஸ் அந்தஸ்தை பெற்ற இளம் இந்தியர் (10 ஆண்டு, 7 மாதம்) ஆனார்.
* புளோரிடாவில் நடக்கும் யு.எஸ்., ஓபன் 'பிக்கிள்பால்' சாம்பியன்ஷிப் ஆண்கள் இரட்டையர் (18 வயது) பைனலில் இந்தியாவின் அர்ஜுன் சிங், ஆதித்யா சிங் ஜோடி 11-1, 11-5 என, அமெரிக்காவின் ரைடர் பிரவுன், சோலி மெஸ்சிரி ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.
