UPDATED : ஏப் 09, 2026 11:41 PM
ADDED : ஏப் 09, 2026 10:05 PM

மான்டி கார்லோ: மொனாக்கோவில், மான்டி
கார்லோ ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. 'ரவுண்டு-16'
போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செக்குடியரசின் தாமஸ் மச்சாக்
மோதினர். இதில் சின்னர் 6-1, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று
காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர்
ஸ்வெரேவ் 6-2, 7-5 என, பெல்ஜியத்தின் ஜிசோவ் பெர்க்சை வீழ்த்தினார்.
பார்சிலோனா அணி தோல்வி
பார்சிலோனா: ஸ்பெயினில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து காலிறுதிக்கான முதல் போட்டியில், ஸ்பெயினின் பார்சிலோனா, அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. இதில் பார்சிலோனா அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. பாரிசில் நடந்த காலிறுதிக்கான முதல் போட்டியில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி (பிரான்ஸ்) 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை (இங்கிலாந்து) வென்றது.
எக்ஸ்டிராஸ்
* இந்தியாவின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96, வயது மூப்பு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். இவர், 8 டெஸ்ட், 83 முதல் தர போட்டிகளில் விளையாடினார். 1951ல் இங்கிலாந்துக்கு எதிரான பிரபோர்ன் டெஸ்டில் அறிமுகமான இவர், 1960ல் ஈடன் கார்டனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் கடைசியாக பங்கேற்றார். டெஸ்ட் அரங்கில் முதல் வெற்றியை (1952, எதிர்: இங்கிலாந்து, இடம்: சென்னை) பதிவு செய்த இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
* பீஹாரில் நடக்கும் சப்-ஜூனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் காலிறுதியில் பஞ்சாப் அணி 5-3 என, ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தியது. மற்றொரு காலிறுதியில் உ.பி., அணி 6-3 என, ஒடிசா அணியை வென்றது. மத்திய பிரதேச அணி 4-3 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் ஹரியானாவை தோற்கடித்தது.
* ஷிம்லாவில் நடந்த ஆசிய யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு 3 தங்கம் (பெண்கள் 19 வயது, ஆண்கள், பெண்கள் 15 வயது) கைப்பற்றியது. வங்கதேச அணிக்கு (ஆண்கள் 19 வயது) ஒரு தங்கம் கிடைத்தது.
* டில்லியில், இந்திய தடகள சீரிஸ்-3 போட்டிகள் இன்று நடக்கவுள்ளன. இதில் ஹிமா தாஸ் (400 மீ., ஓட்டம்), தஜிந்தர்பால் சிங் டூர் (குண்டு எறிதல்), விஷால் (400 மீ., ஓட்டம்), அனிமேஷ் குஜுர் (100, 200 மீ., ஓட்டம்) உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
* இந்தியாவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்டில் (ஜூன் 6-10, இடம்: புதிய சண்டிகர்) ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் 27, பங்கேற்பது சந்தேகம். முதுகுப்பகுதி காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்துள்ள இவரை, டெஸ்டில் விளையாடுவதை தவிர்க்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
