0.01 வினாடியில் நழுவிய 'ஒலிம்பிக்' * தங்கம் வென்று ஜோதி ஆறுதல்
0.01 வினாடியில் நழுவிய 'ஒலிம்பிக்' * தங்கம் வென்று ஜோதி ஆறுதல்
ADDED : மே 23, 2024 11:08 PM

ஜிவாஸ்கிலா: பின்லாந்து ஓட்டத்தில் 0.01 வினாடியில் ஒலிம்பிக் வாய்ப்பை நழுவவிட்டார் இந்தியாவின் ஜோதி.
பின்லாந்தின் 'மோட்டோநெட் ஜி.பி.,' தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் இந்தியா சார்பில் ஜோதி யர்ராஜி களமிறங்கினார். தகுதிச்சுற்றில் 12.80 வினாடி நேரத்தில் வந்து பைனலுக்கு முன்னேறினார். பைனலில் துவக்கத்தில் இருந்து சிறப்பாக ஓடி வந்தார். கடைசியாக உள்ள தடையை தாண்டும் போது கால் இடறியது. இதனால் சற்று தடுமாறிய ஜோதி, சில வினாடிகள் தாமதமாக வந்த போதும், முதலிடம் பிடித்து (12.78 வினாடி) ஜோதி தங்கப்பதக்கம் கைப்பற்றினார். தனது முந்தைய சிறந்த ஓட்டத்தை (12.78) சமன் செய்தார்.
நழுவிய ஒலிம்பிக்
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறத் தேவையான நேரத்தை (12.77 வினாடி), ஜோதி 0.01 வினாடியில் நழுவவிட்டார். இருப்பினும் உலகத் தரவரிசை அடிப்படையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கலாம்.
தேசிய சாதனை
ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தில் இந்தியா சார்பில் தேஜாஸ் ஷிர்ஷே பங்கேற்றார். தகுதிச்சுற்றில் தேஜாஸ், 13.57 வினாடியில் வந்து முதலிடம் பிடித்து பைனலுக்கு தகுதி பெற்றார். அடுத்து நடந்த பைனலில் தேஜாஸ், 13.41 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
தவிர இது புதிய தேசிய சாதனையாக அமைந்தது. முன்னதாக 2017ல் சித்தாந்த் திங்கலாயா, 13.48 வினாடியில் ஓடியது முதலிடத்தில் இருந்தது.
ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் அனிமேஷ் குஜுர், 10.39 வினாடி நேரத்தில் ஓடி, வெள்ளிப்பதக்கம் பெற்றார். மற்றொரு இந்திய வீரர் அம்லன் போர்கோஹெய்ன் (10.54), நான்காவது இடம் பிடித்தார்.
