/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஜோதி, அவினாஷ் ஏமாற்றம்: ஒலிம்பிக் தடகளத்தில்
/
ஜோதி, அவினாஷ் ஏமாற்றம்: ஒலிம்பிக் தடகளத்தில்
ADDED : ஆக 08, 2024 11:12 PM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி 4வது இடம் பிடித்து ஏமாற்றினார்.
பிரான்சில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி பங்கேற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் விளையாடிய முதல் இந்தியரானார். தகுதிச் சுற்றில் (13.16 வினாடி) 7வது இடம் பிடித்த ஜோதி, நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறத்தவறினார். நேற்று நடந்த 'ரெபிசேஜ்' போட்டியில் பந்தய துாரத்தை 13.17 வினாடியில் அடைந்த ஜோதி, 4வது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.
அவினாஷ் '11'
ஆண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சபில் 29, பங்கேற்றார். தகுதிச் சுற்றில் (8 நிமிடம், 15.43 வினாடி) 5வது இடம் பிடித்த இவர், பைனலுக்கு முன்னேறினார். பைனலில் இலக்கை 8 நிமிடம், 14.18 வினாடியில் கடந்த அவினாஷ் 11வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
மொராக்கோவின் சோபியன் எல் பக்காலி (8 நிமிடம், 06.05 வினாடி) மீண்டும் தங்கப்பதக்கத்தை (2020, 2024) தட்டிச் சென்றார். அமெரிக்காவின் கென்னத் ரூக்ஸ் (8 நிமிடம், 06.41 வினாடி), கென்யாவின் ஆபிரகாம் கிபிவோட் (8 நிமிடம், 06.47 வினாடி) முறையே வெள்ளி, வெண்கலத்தை கைப்பற்றினர்.
சித்ரவேல் '27'
ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கர் பங்கேற்றனர். மொத்தம் 32 பேர், இரு பிரிவுகளாக விளையாடினர். 'ஏ' பிரிவில் இடம் பிடித்த தமிழகத்தின் சித்ரவேல், 16.25 மீ., தாண்டி 12வது இடம் பிடித்தார். 'பி' பிரிவில் இடம் பெற்ற அப்துல்லா (16.49 மீ.,) 13வது இடத்தை கைப்பற்றினார். ஒட்டுமொத்தமாக 21, 27வது இடம் பிடித்த முறையே அப்துல்லா, சித்ரவேல் பைனல் வாய்ப்பை இழந்தனர்.