/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'கோ கோ': இந்தியா 'உலக சாம்பியன்'
/
'கோ கோ': இந்தியா 'உலக சாம்பியன்'
UPDATED : ஜன 19, 2025 11:56 PM
ADDED : ஜன 19, 2025 11:51 PM

புதுடில்லி: 'கோ கோ' உலக கோப்பை பைனலில் அசத்திய இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
டில்லியில்,'கோ கோ' உலக கோப்பை முதல் சீசன் நடந்தது. இதில் 23 நாடுகள் சார்பில் 20 ஆண்கள், 19 பெண்கள் அணிகள் பங்கேற்றன. நேற்று நடந்த பெண்களுக்கான பைனலில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பிரியங்கா தலைமையிலான இந்திய அணி 78-40 என்ற புள்ளி கணக்கில் 38 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
லீக் சுற்றில் மூன்று போட்டியிலும் (எதிர்: தென் கொரியா, ஈரான், மலேசியா) வென்ற இந்தியா, காலிறுதியில் வங்கதேசம், அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவை தோற்கடித்தது. பைனலில் நேபாளத்தை வீழ்த்தி, 100 சதவீத வெற்றியுடன் சாம்பியன் ஆனது.
ஆண்களுக்கான பைனலில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பிரதிக் கிரண் தலைமையிலான இந்திய அணி 54-36 என்ற கணக்கில் 18 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
லீக் சுற்றில் 4 போட்டியிலும் (எதிர்: நேபாளம், பிரேசில், பெரு, பூடான்) வென்ற இந்தியா, காலிறுதியில் இலங்கை, அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவை தோற்கடித்தது. பைனலில் மீண்டும் நேபாளத்தை வீழ்த்திய இந்தியா, 100 சதவீத வெற்றியுடன் உலக சாம்பியன் ஆனது.

