ADDED : நவ 16, 2024 10:05 PM

கோல்கட்டா: சர்வதேச செஸ் தொடரில் அசத்திய இந்தியாவின் பிரக்ஞானந்தா, வரிசையாக 6 சுற்றுகளில் வெற்றி பெற்றார்.
கோல்கட்டாவில், டாடா ஸ்டீல் இந்தியா சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. மொத்தம் 18 சுற்று கொண்ட ஓபன் 'பிளிட்ஸ்' பிரிவு போட்டிகள் நடக்கின்றன. முதல் 9 சுற்றுப் போட்டிகள் நடந்தன. இதில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, முதல் மூன்று சுற்றில் இந்தியாவின் விதித் சந்தோஷ், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் நாராயணனிடம் 'ஹாட்ரிக்' தோல்வியடைந்தார்.
பின் எழுச்சி கண்ட பிரக்ஞானந்தா, அடுத்த 6 சுற்றுகளில் அமெரிக்காவின் சோ வெஸ்லே, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக், ஜெர்மனியின் வின்சன்ட் கீமர், இந்தியாவின் நிஹால் சரின், ரஷ்யாவின் டேனியல் டுபோவ், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசியை வீழ்த்தினார்.
ஒன்பது சுற்றுகளின் முடிவில் 6 வெற்றி, 3 தோல்வி என, 6.0 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா 2வது இடத்தில் உள்ளார். நார்வேயின் கார்ல்சன் 6.5 புள்ளிகளுடன் (5 வெற்றி, 3 'டிரா', ஒரு தோல்வி) முதலிடத்தில் உள்ளார். தலா 5.5 புள்ளிகளுடன் இந்தியாவின் அர்ஜுன், ரஷ்யாவின் டுபோவ் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
